போக்குவரத்து நெரிசல் காரணமாக உ.பி. மகா கும்பமேளா மண்டலத்தில் வாகனங்களுக்கு தடை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பிரயாக்ராஜ்: கடந்த மாதம் 13-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மாகி பவுர்ணமி தினம் பார்க்கப்படுகிறது. அதை முன்னிட்டு இன்று (பிப்.11) மாலை 5 மணி முதல் நாளை (பிப்.12) வரை கும்பமேளா மண்டலத்தில் வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகா கும்பமேளா விழாவின்போது புனித நீராட பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்குச் செல்லும் சாலைகளில் நேற்று சுமார் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் வரும் வழியில் உள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும் என காவல் துறை அறிவித்துள்ளது. மேலும், கும்பமேளா மண்டலம் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

“பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பது தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம். முறையாக திட்டமிட்டே அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் வருகை எதிர்பார்த்ததை விட அதிகரித்தது இதற்கு காரணமாக அமைந்து விட்டது” என உத்தர பிரதேச டிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

‘கல்ப்வாஸ்’ எனும் ஒரு மாத கால விரதம் இருந்த பக்தர்கள் மாகி பவுர்ணமியை முன்னிட்டு தற்போது கும்பமேளாவுக்கு வருகை தருவது கூட்டம் அதிகரிக்க காரணம் என மாநில அரசும் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்கள் வழக்கம்போல செயல்படுகிறது: பிரயாக்ராஜில் உள்ள ரயில் நிலையங்கள் வழக்கம்போல செயல்படுகிறது. ரயில் நிலையம் மூடப்பட்டதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in