திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் 4 பேர் கைது: காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ குழு மனு

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் 4 பேர் கைது: காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ குழு மனு
Updated on
1 min read

திருப்பதி எழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்துள்ளது.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களில் விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஆந்திர போலீஸார் அடங்கிய புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு திருப்பதி, உத்தராகாண்ட், ஸ்ரீ காளஹஸ்தி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக உத்தராகாண்ட் மாநிலம் ரூர்கேரியில் உள்ள போலோபாபா ஆர்கானிக் டயரி இயக்குநர்கள் விபிஎஸ் ஜெயின், போமில் ஜெயின், ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள பெனுபாக்காவில் அமைந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவி டயரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வ சவடா, திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ராஜ் ராஜசேகர் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் திருப்பதி கூடுதல் முனிசீஃப் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அவர்களை ஆஜர் படுத்தினர். இவர்கள் 4 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, அவர்கள் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் 10 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ புலனாய்வு குழு தலைவர் வீரேஷ் பிரபு தலைமையிலான குழு திருப்பதி நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in