பொது சிவில் சட்டம் அமல்படுத்திய உத்தராகண்ட் முதல்வர் தாமிக்கு கும்பமேளாவில் துறவிகள் பாராட்டு

பொது சிவில் சட்டம் அமல்படுத்திய உத்தராகண்ட் முதல்வர் தாமிக்கு கும்பமேளாவில் துறவிகள் பாராட்டு
Updated on
1 min read

உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தியுள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு மகா கும்பமேளாவில் அகாடா துறவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆளும் உத்தராகண்டின் முதல்வராக இருப்பவர் புஷ்கர் சிங் தாமி. இவர் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பொது சிவில் சட்டம் அமலாக்கி உள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இங்கு தனது தாய், மனைவி மற்றும் மகனுடன் புனித நீராடினார்.

இதையடுத்து முதல்வர் தாமிக்கு அகாடா துறவிகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஆச்சார்யா மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்த் கிரி பேசுகையில், "உத்தராகண்டை போன்ற ஆன்மிக பூமி உலகில் எங்கும் இல்லை. இதன் முதல்வரான தாமி என் போன்ற அனைத்து துறவிகளின் மனதைக் கவர்ந்தவர்.

உத்தராகண்ட் சிறிய மாநிலமாக இருந்தாலும் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவானது முக்கியத் துறவிகளையும் அணுகி கருத்து கேட்டது பாராட்டத்தக்கது" என்றார்.

விழாவில் ஏற்புரை நிகழ்த்திய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "சனாதனத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள் நிறைந்த முக்கிய மாநிலம் உத்தராகண்ட். இதன் தாக்கத்தால் தான் பொது சிவில் சட்டத்தை முதலாவதாக அமலாக்கி உள்ளோம். இது பிரதமரின் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' கொள்கைக்கும் உதாரணமாகி விட்டது. இதற்காக மகா கும்பமேளாவில் துறவிகளின் ஆசி பெறுவது எனது பாக்கியம். ஹரித்துவாரில் 2027-ல் வரும் கும்பமேளாவை பிரம்மாண்டமாக நடத்துவோம்” என்றார். முதல்வர் தாமி தனது குடும்பத்தாருடன் புனித நீராடிய புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in