பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.1,000 கோடி மோசடி: கேரளாவில் முன்னாள் நீதிபதி மீது வழக்கு பதிவு

கைது செய்யப்பட்ட அனந்து கிருஷ்ணன்
கைது செய்யப்பட்ட அனந்து கிருஷ்ணன்
Updated on
2 min read

பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி கேரளாவில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளது. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் நாயர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். கேரளா முழுவதும் சுமார் 170 தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) பெற்று பொதுமக்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர், லேப் டாப், தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அனந்து கிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார்.

அதாவது ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர் ரூ.60,000-க்கு வழங்கப்படும். ரூ.60,000 மதிப்புள்ள லேப்டாப் ரூ.30,000-க்கு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதை நம்பிய பொதுமக்கள், அனந்து கிருஷ்ணன் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கேரளா முழுவதும் அனந்து கிருஷ்ணன் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணத்தை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.400 கோடி டெபாசிட் உள்ளது. அதோடு திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, மனைகளையும் வாங்கி குவித்துள்ளார். இவற்றின் மதிப்பு பல கோடிகள் என்று கூறப்படுகிறது.

பணம் செலுத்திய மக்களுக்கு ஸ்கூட்டர், லேப்டாப், தையல் இயந்திரங்கள் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க தொடங்கினர். தற்போது வரை மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கேரள காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: தன்னார்வ தொண்டு அமைப்புகள் பெயரில் கேரளா முழுவதும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அனந்து கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை தலைவர் ஆனந்த குமார், ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனந்த குமார் உட்பட வழக்கில் தொடர்புடைய பலர் தலைமறைவாக உள்ளனர்.

சர்தார் படேல், அப்துல் கலாம் உட்பட பல்வேறு தலைவர்களின் பெயர்களில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவற்றை நம்பி மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பணத்தை செலுத்தி ஏமாந்து உள்ளனர்.

அனந்து கிருஷ்ணனின் வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளோம். அவருக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகளும் முடக்கப்பட்டு இருக்கிறது. திருவனந்தபுரம், கொச்சி உட்பட மாநிலம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அறிவுரைப்படி மாநில குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு மோசடி குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளது.

கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவின் குறிப்பிட்ட சில தலைவர்களுக்கு பெரும் தொகையை அனந்து கிருஷ்ணன் நன்கொடையாக வழங்கி உள்ளார். குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது பல்வேறு கட்சிகளுக்கு அவர் நன்கொடை வழங்கி உள்ளார். அவரிடம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இவ்வாறு காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in