Published : 10 Feb 2025 03:54 PM
Last Updated : 10 Feb 2025 03:54 PM
புதுடெல்லி: நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய சோனியா காந்தி, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2013 செப்டம்பரில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) அமல்படுத்தப்பட்டது. நாட்டின் 140 கோடி மக்களுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சி இது.
இந்த சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களில் 75 சதவீதம் வரையிலும், நகர்ப்புற மக்களில் 50 சதவீதம் வரையிலும் மானிய விலையில் உணவு தானியங்களை பொது விநியோக முறையின் (TPDS) கீழ் பெற்று வருகிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 81.35 கோடி பேர் இந்த சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பே இன்னமும் பின்பற்றப்படுகிறது. பயனாளிகளுக்கான ஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சட்டம் மிகவும் முக்கியமான ஒரு சட்டம். கோவிட் பெருந்தொற்று காலத்தில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினியிலிருந்து பாதுகாக்கப்பட இந்த சட்டம் முக்கிய பங்காற்றி உள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறது.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு முதலில் 2021 இல் திட்டமிடப்பட்டது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.
பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதனால் சுமார் 14 கோடி தகுதியுள்ள இந்தியர்கள் NFSA இன் கீழ் அவர்களின் உரிமையான சலுகைகளை பெற முடியாமல் உள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பது அவசியம். மேலும், தகுதியான அனைத்து நபர்களும் NFSA இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வது அவசியம். உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல. அது ஒரு அடிப்படை உரிமை.” என்று கூறினார்.
பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தின் (PMGKAY) கீழ் இலவச உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான காலம் ஜனவரி 1, 2024 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT