உ.பி. மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!

உ.பி. மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.

இதற்காக இன்று (திங்கள்கிழமை) அதிகாலை பிரயாக்ராஜுக்கு வந்த அவரை, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு முன் படகில் பயணித்த திரவுபதி முர்மு, அந்த இடத்துக்கு வந்துள்ள புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உணவளித்தார்.

இதையடுத்து, திரிவேணி சங்கத்தில் திரவுபதி முர்மு புனித நீராடினார். தனது இந்த பயணத்தின்போது, அக்ஷயவத் மற்றும் ஹனுமான் கோயில்களில் பூஜையும் சாமி தரிசனமும் செய்ய உள்ளார். மேலும் டிஜிட்டல் கும்ப அனுபவ மையத்தையும் அவர் பார்வையிடுவார் என்று குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13) தொடங்கிய மகா கும்பமேளா, உலகின் மிகப்பெரிய ஆன்மிக மற்றும் கலாச்சார சங்கமமாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்த்து வரும் கும்பமேளா, பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடையும்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு புனித நீராட வருகிறார்கள். இங்கு வர முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். 2027 கும்பமேளா ஹரித்வாரில் நடைபெற உள்ளது, அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.” என குறிப்பிட்டார்.

தெலங்கானா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டியும் திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு வந்ததில் நான் பாக்கியவானாக உணர்கிறேன். இந்த சந்தர்ப்பம் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளது. உத்தர பிரதேச அரசு மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர், அவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என தெரிவித்தார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி பீஷ்ம அஷ்டமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in