Published : 10 Feb 2025 07:56 AM
Last Updated : 10 Feb 2025 07:56 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தின் நீமச் மாவட்டம், தாடா பஞ்சாயத்து தலைவராக கைலாஷி பாய் கசாவா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த மாதம் இவர் தனது பதவிக்கான அதிகாரங்கள், உரிமைகளை உள்ளூர் ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பவருக்கு தாரைவார்த்து உள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ரூ.500 மதிப்புள்ள முத்திரை தாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் கைலாஷி பாய் கசாவா கூறியிருப்பதாவது: தாடா கிராம பஞ்சாயத்து தலைவராக என்னால் திறம்பட பணியாற்ற முடியவில்லை. எனவே எனது பதவிக்கான அதிகாரங்கள், உரிமைகளை ஒப்பந்ததாரர் சுரேஷுக்கு வழங்குகிறேன்.
4 மடங்கு இழப்பீடு: இதன்படி 100 நாள் வேலை திட்டம், பிஎம் ஆவாஸ் யோஜனா, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளை சுரேஷ் மேற்கொள்வார். அவர் வழங்கும் ஆவணங்களில் மறுப்பு தெரிவிக்காமல் நான் கையெழுத்திடுவேன். இந்த விதிகளை மீறினால் 4 மடங்கு இழப்பீடு வழங்கவும் ஒப்புக் கொள்கிறேன். இவ்வாறு ஒப்பந்தத்தில் கைலாஷி பாய் கசாவா உறுதி அளித்திருக்கிறார்.
இந்த ஒப்பந்த நகல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக தலைமை செயல் அதிகாரி அமன் வைஷ்ணவ், தாடா பஞ்சாயத்து தலைவர் கைலாஷி பாய் கசாவாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், “உரிய விளக்கம் அளிக்காவிட்டால் பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்து தலைவர் கைலாஷி பாய் கசாவாவின் கணவர் ஜெகதீஷ் கூறும்போது, “பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான அதிகாரங்கள், உரிமைகளை ஒப்பந்ததாரர் சுரேஷுக்கு வழங்கவில்லை. சில கட்டுமான பணிகளை மேற்கொள்ள மட்டுமே அவருக்கு ஒப்பந்தத்தை வழங்கினோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT