Published : 09 Feb 2025 05:21 PM
Last Updated : 09 Feb 2025 05:21 PM
பாட்னா: டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, இந்தாண்டு இறுதியில் பிஹாரில் நடக்க இருக்கும் பேரவைத் தேர்தலையும் பாதிக்கும் என்ற கூற்றை, பிஹார் எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார்.
டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய தேஜஸ்வி, "ஜனநாயகத்தில் மக்களே உச்சபட்சமான அதிகாரம் கொண்டவர்கள். டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும், அவை வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டும் இருக்காது என்று நம்புவோம்.
டெல்லி தேர்தல் வெற்றி பிஹாரில் எதிரொலிக்குமா என்று கேட்கிறீர்கள். பிஹார் என்பது வேறு, முதலில் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். பிஹாரில் என்டிஏ கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமை தாங்குகிறார். அவர் கடந்த 2005-ல் முதல் முதல்வராக இருக்கிறார். சில காலம் மட்டுமே ஜித்தன் ராம் மாஞ்சி-யின் ஆட்சி இருந்தது" என்று தெரிவித்துள்ளார். பிஹார் நிதிஷ் குமார், இரண்டு முறை ஆர்ஜேடியின் உதவியுடன் முதல்வராக நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடித்து பாஜக வரலாற்று வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த முறை இண்டியா கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக களம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT