Published : 09 Feb 2025 12:21 PM
Last Updated : 09 Feb 2025 12:21 PM
மும்பை: மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது, துரதிருஷ்டவசமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நாடு செழிக்க வேண்டுமென்றால், வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களும், கிழக்கில் உள்ள பிஹார், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் கட்டாயம் வளர்ச்சி அடையவேண்டும் என்ற பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார் என கூறினார். ஏபிவிபி மற்றும் மாநிலங்களுக்கிடையேயான மாணவர் வாழ்வியல் அனுபவம் ஆகிய அமைப்புகளின் முன்னெடுப்பில் நடந்த ராஷ்ட்ரீய ஏகத்மதா யாத்திரை 2025-ல் அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: "கடந்த 11 ஆண்டுகளாக மகாபாரதத்தின் அர்ஜுனனைப் போன்ற மோடி அரசின் கூரிய கவனம் ( laser focus) வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் மீது உள்ளது.
மகாராஷ்டிராவில் முன்பு இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசின் சில தலைவர்கள், மகாராஷ்டிரா செலுத்திய வரி பங்கீட்டை கணக்கிட்டு, மத்திய நிதியில் இருந்து அதே அளவு நிதியினை பெற வேண்டும் என்று கோருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது.
இதேபோல், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களும் அவை செலுத்திய வரியை நிதியாக பெறவேண்டும் என்று கோரி வருகின்றன. இதை விட சிறுபிள்ளைத்தனமான விஷயம் வேறு இருக்க முடியாது. இதை விட துரதிருஷ்டவசமான விஷயமும் வேறு இருக்க முடியாது.
ஆனால், மகாராஷ்டிராவில் தற்போது இருக்கும் பாஜக தலைமையிலான அரசு, வடகிழக்கு இந்தியாவை மிகவும் உணர்வுப்பூர்வமான எண்ணத்துடன் பார்க்கிறது. அதனால் இப்போது கவலையில்லை.
மத்தியில் இருக்கும் மோடி அரசு கடந்த 11 ஆண்டுகளாக, கிழக்கை நோக்கி செயல்படுங்கள், கிழக்கை திரும்பி பாருங்கள் என்று வடகிழக்கை முன்னிலைபடுத்தும் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது.
மோடி அரசின் கீழ், வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு நெடுஞ்சாலை வலையமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 65க்கும் அதிமான முறை வடகிழக்குக்கு சென்று வந்துள்ளார். வடகிழக்கின் அழகையும், கலாச்சாரத்தையும் காண வாழ்வில் ஒருமுறையாவது அங்கு சென்று வரவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்." இவ்வாறு பியூஸ் கோயல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT