பாஜக மீண்டும் வென்றால் ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகும்: சசி தரூர் பேச்சால் சர்ச்சை

பாஜக மீண்டும் வென்றால் ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகும்: சசி தரூர் பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்பட்டு, ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகி விடும் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சசி தரூர் பேசுகையில் ‘‘அனைவரையும் ஏற்றுக் கொள்ளாத, சகிப்புதன்மை இல்லாத மத்திய அரசு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குகிறது. இதனால் நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிந்தனை எல்லாம், இந்து அரசை உருவாக்குவதும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பறிப்பதும் தான்.

அடுத்த மக்களவை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால் மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல் போன்ற தலைவர்கள் கண்ட கனவை சீர்குலைத்து ‘இந்து பாகிஸ்தானை’ உருவாக்கி விடுவார்கள்’’ எனக் கூறினார்.

சசி தரூரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பத் பத்ரா கூறுகையில் ‘‘பாகிஸ்தான் உருவாக காங்கிரஸே காரணம். தற்போது இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்துகளின் மனம் புண்படும்படி காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். இதற்காக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in