

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஆதிஷி சிங் 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் கல்காஜி தொகுதியில் முதல்வர் ஆதிஷி சிங் (43) ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஆதிஷி சிங் 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 48,633, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா 4,392 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர். ஆதிஷி கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் தோல்வி அடைந்தனர். இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி சார்பில் ஆதிஷி முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்விந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, ஆம் ஆத்மி கட்சியை வழிநடத்துவதில் ஆதிஷி முக்கிய பங்கு வகித்தார். கேஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையான போதிலும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆதிஷி கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவரான ஆதிஷி, டெல்லியின் கல்வி அமைச்சராக, அரசு பள்ளிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதன்மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.