மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அர்விந்த் கேஜ்ரிவால் பேட்டி
புதுடெல்லி: மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. 22 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் கேஜ்ரிவால் கூறியதாவது:
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். மக்கள் முடிவுதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி பெற்ற பாஜக.வுக்கு வாழ்த்துகள். பெரும்பான்மை வெற்றியை அளித்த மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக நிறைவேற்றும் என நம்புகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் ஆகிய துறைகளில் நாங்கள் பல பணிகளை செய்தோம். டெல்லி கட்டமைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முயன்றோம். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படாமல், மக்களுக்கு உதவ தொடர்ந்து பணியாற்றுவோம். நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு உதவுவதற்காக அரசியலுக்கு வந்தோம். இந்த தேர்தலில் கடுமையாக உழைத்த ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
