Published : 08 Feb 2025 12:57 PM
Last Updated : 08 Feb 2025 12:57 PM

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; 80-வது இடத்தில் இந்தியா!

பாஸ்போர்ட் | கோப்புப் படம்

புதுடெல்லி: சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும். இந்தியாவுக்கு என்ன இடம் என்பது குறித்தும் காண்போம்.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இதுகுறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (2025 Henley Passport Index) தற்போது வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்திலும், ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும். ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்து விசா இல்லாமலே 190 நாடுகளுக்குச் செல்லலாம்.

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு நாடுகள் அப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த நாட்டின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 189 இடங்களுக்குப் பயணிக்க முடியும். அமெரிக்கா இப்போது 9-வது இடத்தில் உள்ளது. அதாவது, விசா இல்லாமல் 183 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

ஆப்கானிஸ்தான் 25 நாடுகளுக்கு மட்டுமே செல்லக்கூடிய கடைசி 99-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், சிரியா 98-வது இடத்திலும் (27 நாடுகள்), ஈராக் 97வது இடத்திலும் (30 நாடுகள்) உள்ளது.

இந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 80-வது இடத்தில், அதாவது 56 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி உள்ளது. இவ்விடத்தை அல்ஜீரியா, ஈக்வடோரியல் கினியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது இந்தியா. மியான்மர் 88-வது இடத்திலும், இலங்கை 91-வது இடத்திலும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x