‘உங்களுக்குள் சண்டையிடுங்கள்’ - டெல்லி தேர்தல் முடிவை குறிப்பிட்டு உமர் அப்துல்லா கிண்டல்!

உமர் அப்துல்லா | கோப்புப்படம்
உமர் அப்துல்லா | கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலை பெற்றிருக்கும் சூழலில் காஷ்மீர் முதல்வரும், இண்டியா கூட்டணியின் அங்கத்தினருமான உமர் அப்துல்லா, ‘உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுங்கள்’ என்று காங்கிரஸ், ஆம் ஆத்மியை கேலி செய்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் உமர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பிரபலமான வீடியோ மீம்ஸையும் பகிர்ந்துள்ளார். அதில், " உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோல்வியுறச் செய்யுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்குள் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு இடையில் உமர் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின்பு கூட்டணிகளுக்கு இடையே செயல்படாத தன்மை மற்றும் ஒற்றுமையின்மையை அவர் வெளிப்படையாக சாடியுள்ளார்.

முன்னதாக கூட்டணியின் நீண்ட நாள் நோக்கம் குறித்து முன்பு உமர் கேள்வி எழுப்பி இருந்தார். “இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் தான் உருவாக்கப்பட்டது என்றால் அதனை முடித்துக்கொள்வது பற்றி முடிவெடுக்கலாம்.” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், டெல்லி பேரவைத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது என்று ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் முடிவெடுத்திருந்த நிலையில் உமர் இந்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இண்டியா கூட்டணியின் இருப்பு குறித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்தலைவர் உமர் அப்துல்லாவின் இந்தக் கேள்வி, கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் விரிசலை நீக்குவதற்கானது மட்டுமில்லை, கூட்டணியின் ஒற்றுமையை விட சுயநலத்துக்கான கட்சிகளின் முன்னுரிமை குறித்த வெறுப்பு என்பதாக பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது டெல்லி தேர்தலில் பாஜகவின் முன்னிலை ஆதிக்கத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. டெல்லி வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப போக்கில் ஆம் ஆத்மி கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக முன்னிலை பெற்றிருப்பதுடன், 27 ஆண்டுகளுக்கு பின்பு தேசிய தலைநகரில் ஆட்சியை பிடிக்கும் பாதையில் முன்னேறி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in