Published : 08 Feb 2025 09:43 AM
Last Updated : 08 Feb 2025 09:43 AM
புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடினார். ஆரத்தியிலும் கலந்துகொண்டவர், சனாதனக் கலாச்சாரத்தை பாராட்டினார்.
உ.பி.யின் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு பிஹாரின் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வருகை புரிந்திருந்தார். இவரை உ.பி அரசின் சார்பில் அம்மாநில தொழில்துறை அமைச்சரான நந்து கோபால் குப்தா நந்தி வரவேற்றார். நேராக திரிவேணி சங்கமத்தில் தன் புனித நீராடலை அவர் முடித்தார். முக்கூடலில் நடைபெற்ற ஆரத்தி பூசையிலும் ஆளுநர் ஆரீப் முகம்மது கான் கலந்து கொண்டார்.
பிறகு கரையிலுள்ள சுவாமி பரமானந்த் நிகேதன் முகாமுக்கு ஆளுநர் ஆரிப் சென்றார். முகாமிலிருந்த சிந்தானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஆளுநர் ஆரிப் முகம்மது கானுடன் ஆன்மிகக் கலந்துரையாடல் நடத்தினார். இதில் ஆளுநர் ஆரிப்புக்கு இந்து கலாச்சாரம், கங்கை நதி பாதுகாப்பு மற்றும் கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பிறகு உ.பி அரசின் சிறப்பு பாதுகாப்பு படகில் முக்கூடலில் பயணித்தார் ஆளுநர் ஆரிப்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆளுநர் ஆரிப் கூறுகையில், ‘இந்தயக் கலாச்சாரத்தின் சனாதனத்தை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். இதனால், நம்மிடையே உள்ள அனைத்து வேற்றுமைகளும் மறைந்து விடும். இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தின் பெருமை மகா கும்பமேளாவில் தெரிகிறது. இந்த நிகழ்வின் மூலம் அமைதி, ஒற்றுமை மற்றும் சர்வதேசத்துக்கானப் சமூகப் பணியை காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் வருகை புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதிக்குள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT