Published : 08 Feb 2025 08:51 AM
Last Updated : 08 Feb 2025 08:51 AM

Delhi Election Results 2025: பாஜகவிடம் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி; டெல்லியில் காங்கிரஸ் ‘ஹாட்ரிக்’ ஜீரோ!

புதுடெல்லி: 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக. டெல்லியில் மொத்தமுள்ள தொகுதிகள் 70. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை எனும் நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், வெறும் 22 தொகுதிகளை மட்டும் வசமாக்க்கும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வெற்றி / முன்னிலை @ 7 PM:
பாஜக கூட்டணி - 48
ஆம் ஆத்மி - 22
காங்கிரஸ் - 0
(ஆட்சி அமைக்க தேவை 36 இடங்கள்)

பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து: “டெல்லி தேர்தல் வெற்றி வளர்ச்சிக்கு, நல் நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி. டெல்லியின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இன்று மாலை பிரதமர் மோடி, பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடு முழுவதும் பொது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு முன்மாதிரியாக விளங்கும். இது டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.

டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இது ஆணவம் மற்றும் அராஜகத்தின் தோல்வி. இது 'மோடியின் உத்தரவாதம்' மற்றும் மோடியின் வளர்ச்சிப் பார்வை மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெற்றியாகும். இந்த மகத்தான வெற்றிக்கு டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மோடியின் தலைமையின் கீழ் டெல்லி இப்போது ஒரு சிறந்த தலைநகராக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவால், சிசோடியா தோல்வி: தற்போதைய நிலவரப்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடெல்லியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கிடம் தோல்வியுற்றார். அதேபோல் ஆம் ஆத்மி முக்கியத் தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். டெல்லி முதல்வராக பாஜக பர்வேஷ் சாஹிப் சிங்கையே தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே பாஜக நிலையான ஆதிக்கத்தை செலுத்திவந்தது. மாலை 7 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அமோக வெற்றி உறுதியாவதால் டெல்லி பாஜக அலுவலகம் கொண்டாட்டங்களால் களை கட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸுக்கு பூஜ்ஜியமே மிஞ்சுகிறது.

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக அந்தக் கட்சிக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது. அத்துடன், காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

600 வாக்குகள் வித்தியாசத்தில் - மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தனது தோல்வி குறித்து அவர், "கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் போராடினர். நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். மக்களும் எங்களை ஆதரித்துள்ளனர். ஆனால், நான் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். வெற்றி பெற்ற வேட்பாளரை நான் வாழ்த்துகிறேன். அவர் தொகுதிக்காக உழைப்பார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

படம்: ஷிவ்குமார் புஷ்பகர்

26 ஆண்டுகளுக்குப் பின்னர்... - டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பாஜக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 48 இடங்களை வசப்படுத்துகிறது. வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக முன்னேறியது. இதனால், டெல்லி பாஜக அலுவலகம் உற்சாகமாகக் காணப்படுகிறது. 26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை பாஜக கைப்பற்றியுள்ளது அக்கட்சியினரை கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x