Published : 08 Feb 2025 07:24 AM
Last Updated : 08 Feb 2025 07:24 AM
கர்நாடகாவில் சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிகுவிக் பயன்படுத்தி ஒட்டிய அரசு செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹடூரை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கடந்த ஜனவரி 14ம் தேதி கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சிறுவனின் பெற்றோர் ஹடூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த செவிலியர் ஜோதி சிறுவனின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஃபெவிகுவிக் கொண்டு ஒட்டியுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், செவிலியரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''தையல் போட்டால் முகத்தில் தழும்பு தெரியும். பெவிக்விக் போட்டு ஒட்டினால் அவ்வாறு தழும்பு தெரியாது'' என கூறியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சிறுவனின் பெற்றோர், செவிலியர் ஜோதி ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ அண்மையில் கன்னட ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய கர்நாடக சுகாதாரத் துறையின் வட்டார அலுவலர், மருத்துவமனை நடைமுறை விதிகளுக்கு புரம்பாக செயல்பட்டதாக செவிலியர் ஜோதியை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஃபெவிகுவிக் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கண்காணிக்க சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT