

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.750 கோடியை கேரள அரசு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
கேரள சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக வரும் நிதியாண்டுகான பட்ஜெட்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து ரூ.2,221 கோடிக்கு விரிவான குறிப்பாணை கடந்தாண்டு நவம்பரில் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. இருப்பினும், பட்ஜெட்டில் அதற்காக எந்த சிறப்பு நிதி தொகுப்பும் அறிவிக்கப்படவில்லை. கேரள அரசின் கோரிக்கை வசதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பங்களிப்பு மூலமாக வயநாடு நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த தனியார் நிதியுதவியைப் பெறும் முயற்சிகளையும் அரசு தீவிரமாக முன்னெடுக்கும். இவ்வாறு பாலகோபல் கூறினார்.