

விடுப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து, சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் உள்ள கரிகாரி பவனில் மாநில அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோதேபூர் பகுதியை அமித் குமார் சர்க்கார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் விடுப்பு எடுப்பது தொடர்பாக அவருக்கும் சக ஊழியர்கள் சிலருக்கும் இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விடுப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அமித் குமார் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் தாக்கினார். பிறகு ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்தனு சாகா, சர்தா லேட், ஷேக் சதபுல் ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையில் அமித் குமார் பட்டப்பகலில் ஒரு பையை முதுகில் சுமந்துகொண்டு, மற்றொரு பையை கையில் ஏந்தியவாறு கத்தியுடன் நடந்து செல்வது ஒரு வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளது. வழிப்போக்கர்கள் சிலர் அவரை தங்கள் மொபைல் போனில் படம்பிடிப்பதும் அவர்களை அருகில் வர வேண்டாம் என்று அமித் குமார் எச்சரிப்பதும் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தப்பிச்செல்ல முயன்ற அமித் குமாரை போலீஸார் கைது செய்து விசாரண நடத்தி வருகின்றனர். அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.