

ஒரு பணியில் எந்த அளவுக்கு ஒருவரால் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட முடியும்..? எவ்வளவு காலம் தளராத ஈடுபாட்டுடன் ஒருவரால் சிறந்து செயலாற்ற முடியும் ...?
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது 103 வது வயதில் மறைந்த ஆர் எஸ் வெங்கட்ராமன் - ஒரு தலை சிறந்த உதாரணம்.
தில்லி ஆல் இந்தியா ரேடியோ 'தென்கிழக்கு ஆசியா ஒலிபரப்பு சேவை'யில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அமரர் ஆர் எஸ் வி - இன்றைய இளம் செய்தி வாசிப்பாளர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மாபெரும் சரிதம்.
தில்லி ஆல் இந்தியா ரேடியோ தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்பில், செய்தி அறிக்கை காலை 5:50-க்கே வரும். இந்த செய்தி அறிக்கை ஆங்கிலம் / இந்தியில்தான் தரப்படும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்து வாசிக்க வேண்டும். தான் பணியில் இருந்த வரை, காலை 5:50 செய்திக்கு அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே நிலையத்துக்கு வந்து விடுவார். ஆனாலும், செய்தி வாசிப்புக்கு சில நிமிடங்கள் / சில நொடிகள் முன்புதான் வாசிக்க வேண்டிய செய்தி அறிக்கை ஆங்கிலத்தில் / இந்தியில் கிடைக்கும். இதுவும் அன்றி, செய்தி வாசிப்பின் போதே ஏதேனும் முக்கிய செய்தி பற்றிய குறிப்பு ஆங்கிலத்தில் / இந்தியில் வந்து சேரும். இதனை, ஆங்கிலம் / இந்தியில் பார்த்துக் கொண்டே, நேரலையில் தமிழில் வாசிப்பார்!
அமரர் ஆர்எஸ்வியின் தமிழாக்கம் அபாரமாக இருக்கும். மிக நீளமான, மிகக் கடினமான சொற்றொடரை, பாமருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் சிறு வாக்கியமாக வழங்குவார்.
நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, அனைவருக்கும் புரிகிற அழகு தமிழ், இத்துடன் தனது பணியில் தீவிர ஈடுபாடு, அர்ப்பணிப்புணர்வு... இதுதான் ஆர்எஸ்வி. செய்தி வாசிப்பை ஒரு தவமாக, ஒரு புனிதக் கடமையாகக் கருதினார். ஊதியத்துக்காக அல்லாமல், ஓர் ஊழியமாக, மக்களுக்கு 'செய்தி' சொல்வதைத் தனக்கு கிடைத்த நல்வரமாகக் கருதி மிகுந்த மன மகிழ்ச்சியுடன் செய்தார்.
தான் பணி ஓய்வு பெற்ற பிறகும், சுமார் 30 ஆண்டு காலம், அதாவது சுமார் 85 வயது வரை, ஒப்பந்த அடிப்படையில், தொடர்ந்து ஆல் இந்தியா ரேடியோவில் சேவை புரிந்து வந்தார். முதுமை காரணமாக எதிர்பாராத நோய் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் ஒவ்வொரு நாளும் 'ஆல் இந்தியா ரேடியோ' சென்று வர வேண்டும் என்று அடம் பிடித்தபடியே இருந்தார்.
அமரர் ஆர் எஸ் வி யின் புதல்வி திருமதி மனோரமா கணேஷ் குமார், நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்: எந்நாளும் எந்நேரமும் செய்தி வாசிப்பையே யோசித்துக் கொண்டிருப்பார். தான் முதுமையில் இருக்கிறோம், செய்தி வாசிக்க வாய்ப்பில்லை என்பதை ஏற்க மறுத்தார். தனது 102வது வயதில், தான் மறைவதற்கு சில மணி நேரம் முன்பு கூட, அவர் கூறிய வாசகம் - 'நேரம் ஆயிடுச்சு.. கிளம்பணும்.. ஒரு வினாடி கூட, தாமதமாகக் கூடாது..'
புகழ்பெற்ற செய்தியாளர் எச் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது நெருங்கிய நண்பர் குறித்து இவ்வாறு கூறுகிறார்: ஆர் எஸ் வி க்கு செய்தி வாசிப்பு தான் எல்லாமே. தானொரு விற்பன்னர் என்பதை எந்த நேரத்திலும் அவர் காட்டிக் கொண்டது இல்லை. மொழிபெயர்ப்பில் அவருக்கு இருந்த திறமை புலமை உண்மையில் அபாரமானது. எளிய தமிழில் அவரது குரலில் செய்தி அறிக்கை - கேட்கவே சுகமானது..'
அமரர் ஆர் எஸ் வி - எழுத்திலும் வல்லவர். கஜமுகன் என்கிற பெயரில் பல சிறுகதைகள் எழுதி உள்ளார். ஆல் இந்தியா ரேடியோவின் முன்னாள் நிலைய இயக்குனர் திரு விஜய திருவேங்கடம், ஆர் எஸ் வீயின் எழுத்துப் புலமையை வெகுவாக ரசித்துக் கூறுகிறார் - 'இயல்பான நடையில் ஆழமாகக் கதை சொல்வதில் ஆர் எஸ் வி கைதேர்ந்தவர். செய்தி வாசிப்பில் அவர் காட்டிய நுணுக்கம், அவரது எழுத்திலும் வெளிப்பட்டது'.
இந்தியா சுதந்திரம் பெற்றதை, முதலில் தமிழில் அறிவித்தவர் அமரர் ஆர் எஸ் வி. தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்பில் காலை 5:50 க்கே செய்தி அறிக்கை ஒலிபரப்பாகி விடும் என்பதால், இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை, தமிழில், இவரே முதலில் வாசித்தார். இதன் பிறகு காலை 7:15 மணிக்கு 'நமக்கு' அறிவித்தவர் - மற்றொரு விற்பன்னர் அமரர் பூர்ணம் விஸ்வநாதன்!
1990களின் தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்பில் இதே, மொழிபெயர்ப்பாளர் - செய்தியாளர் பணியில் நான் மிகக் குறுகிய காலம் இருந்தேன். அப்போதெல்லாம், எங்களுக்கு சொல்லித் தரப்பட்ட பாடம் இதுதான் - 'ஆர்எஸ்வி மாதிரி வாசிக்க பழகிக்குங்க..'
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல் வடிவில் கொண்டு வர, அன்னாரின் திறமை புலமை அர்ப்பணிப்புணர்வு.. இப்படி இன்னும் பல நற்குணங்கள் தேவை. இன்றும் இனிவரும் காலங்களிலும் நேர்த்தியான செய்தி வாசிப்புக்கு அமரர் ஆர் எஸ் வி ஏ சிறந்த முன்மாதிரி. பணியில் சேர்ந்த முதல் நாள் தொடங்கி தனது இறுதி மூச்சு வரை, செய்தி வாசிப்பு குறித்து அமரர் ஆர்எஸ்வியின் பார்வை, கருத்து, அணுகுமுறை மகாகவி பாரதியின் இந்த கவிதை வரிகளுக்கு ஏற்பதான் இருந்தது -
"வேள்வியில் இதுபோல் வேள்வி யொன்றில்லை; தவத்தில் இது போல் தவம் பிறிதில்லை."
அந்த வகையில், அமரர் ஆர் எஸ் வி ஆற்றிய செய்திப் பணி, தமிழ்ப் பணி, மக்கள் பணி - என்றும் நமக்குக் கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டும்!