‘நொறுக்குத் தீனி’ நுகர்வு அதிகரிப்பு: கடும் கடுப்பாடுகளுக்கு பாஜக எம்.பி வலியுறுத்தல்

சுஜீத் குமார் | கோப்புப்படம்
சுஜீத் குமார் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த சில வருடங்களாக செறிவற்ற நொறுக்குத் தீனி உட்கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள பாஜக எம்.பி. சுஜீத் குமார், பாக்கெட்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள், அதிக வரிகள் விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி., “உப்பு, சர்க்கரை, தீங்கிழைக்கும் கொழுப்பு, அதேநேரத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள நொறுக்கு தீனி உட்கொள்ளும் கலாச்சாரம் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த 2006 - 2019-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது 40 மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் 2023-ம் ஆண்டு அறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது.

ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறையுடன் கூடிய அதிகப்படியான நொறுக்குத் தீனி நுகர்வு சமீப காலங்களில் தொற்றா நோய்கள் அதிகரிப்புக்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஐசிஎம்ஆர்-ன் அறிக்கையின்படி, தொற்றா நோய்கள் தொடர்பான இறப்பு விகிதம் கடந்த 1990-களில் 37.9 சதவீதத்தில் இருந்து, 2016-ல் 67.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. விளம்பரங்கள் எல்லாம் குழந்தைகளை குறிவைத்தே எடுக்கப்படுவதால், இந்தப் பழக்கத்துக்கு அவர்கள் தீவிரமாக அடிமையாகி வருவது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. நமது மக்கள் தொகையில் சுமார் 41 சதவீதம் குழந்தைகளே. நமது குழந்தைகள் ஆரோக்கியமற்றவர்களாக வளர்வது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் சிறப்பான பொருள்களை விற்பனை செய்யும் ஒரு பிராண்ட், இந்தியாவில் அதே பெயரில் மிகவும் மலிவான பொருள்களை விற்பனை செய்கின்றன. நமது பொருட்களுக்கான ஒழுங்குமுறையில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியர்களின் ஆரோக்கியத்தை விட லாபத்தையே முன்னிலைப்படுத்துகின்றன. அதனால் ஒழுங்குமுறைகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

மேலும், “FSSAI தமது ஒழுங்குமுறைகளைக் கடுமையாக்க வேண்டும், நொறுக்கு தீனிகளுக்கு சுகாதார வரியை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும், பாக்கெட்களில் அடைப்பட்ட உணவுகளில் அதில் அடங்கியிருக்கும் பொருட்களை தெளிவான எழுத்துகளில் அச்சிடுவதற்கு அழுத்தம் கொடுத்து அரசு அதனைக் கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in