

கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளின் போது 294 பேர் உயிரிழந்ததாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் கூறும்போது: கடந்த 2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் சாக்கடை சுத்தம் செய்வது தொடர்பான பணிகளின் போது 294 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 249 பேருக்கான முழு இழப்பீட்டு தொகையும் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 45 பேருக்கு இன்னும் இழப்பீடு வழங்க வேண்டி உள்ளது.
சஃபாய் கரம்சாரிகளுக்கான தேசிய ஆணையம் இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்குவதற்காக மாநில மற்று் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. தூய்மை பணிகளின்போது இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிலையான காலக்கெடு எதுவும் வகுக்கப்படவில்லை.
இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அக்டோபர் 19 2023 வரை சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.