அமெரிக்க என்ஜின் அடுத்த மாதம் வருவதால் தேஜஸ் விமான உற்பத்தியை விரைவுபடுத்த திட்டம்

அமெரிக்க என்ஜின் அடுத்த மாதம் வருவதால் தேஜஸ் விமான உற்பத்தியை விரைவுபடுத்த திட்டம்
Updated on
1 min read

போர் விமான என்ஜின்களை அடுத்த மாதம் முதல் விநியோகிப்பதாக அமெரிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளதால், தேஜஸ் போர் விமானங்களின் உற்பத்தியை விரைவுபடுத்த எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தேஜஸ் போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) தயாரிக்கிறது. இந்த விமானங்களுக்கான ஜிஇ-404 ரக என்ஜினை அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் விநியோகிக்கிறது. இந்நிறுவனத்திடம் 99 என்ஜின்களை ரூ.5,375 கோடிக்கு வாங்க கடந்த 2021-ம் ஆண்டில் எச்ஏஎல் நிறுவனம் ஆர்டர் கொடுத்தது. ஆனால், இந்த என்ஜின்கள் விநியோகத்தை அமெரிக்க நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதித்து விட்டது. அடுத்த மாதம் முதல் இந்த என்ஜின்கள் விநியோகிக்கப்படும் எனவும், அடுத்தாண்டுக்குள் 12 என்ஜின்கள் வழங்குவதாகவும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 20 என்ஜின்கள் வழங்குவதாகவும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதனால் தேஜஸ் விமான தயாரிப்பை விரைவுபடுத்த எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு தேஜஸ் மார் க் 1ஏ ரகத்தை சேர்ந்த 3 விமானங்களும், 4 பயிற்சி விமானங்களும் என்ஜின் மட்டும் பொருத்தப்படாமல் தயார் நிலையில் உள்ளது. ஜி.இ என்ஜின்கள் அடுத்த மாதம் முதல் வருவதால் ஓரிரு நாளில் இந்த என்ஜின்கள் தேஜஸ் விமானங்களில் பொருத்தப்பட்டு விடும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேஜஸ் மார்க் 1-ஏ ரக போர் விமானத்தில் எலக்ட்ரானிக் போர் கருவிகள், இஸ்ரேல் ரேடார் ஆகியவை பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை படையில் சேர்க்க அதிகளவில் ஆர்டர் கொடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் என்ஜின் விநியோகத்தை பொறுத்து ஆண்டுக்கு 20 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படையில் படைப் பிரிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in