Published : 06 Feb 2025 09:51 AM
Last Updated : 06 Feb 2025 09:51 AM

‘கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம்

புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்​தசரஸுக்கு 104 பேர் வந்தடைந்தனர்.

“கடந்த ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைந்தபோது அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் என்னை பிடித்தனர். முறையான விசா மூலம் என்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொல்லிய டிராவல் முகமை நிறுவனம் என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. அமெரிக்கா செல்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று செலவு செய்துள்ளேன்.

நான் பிரேசிலில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு 11 நாள் காவலில் இருந்த நிலையில் நாடு திரும்பி உள்ளேன். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது எங்களின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்கள் பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டது. நாங்கள் வந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே சங்கிலி அகற்றப்பட்டது” என்று 36 வயதான ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தை சேர்ந்தவர்.

“அமெரிக்க அதிகாரிகள் எங்களை வேறொரு முகாமுக்கு அழைத்து செல்வதாக சொல்லி பயணத்தை தொடங்கினர். ஆனால், செய்தி மூலமாக நாங்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்தோம். வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவலாம் என்ற எங்களது கனவு இப்போது தகர்ந்தது” என்கிறார் ஜஸ்பால் சிங்கின் உறவினர் ஜஸ்பீர் சிங்.

பின்னணி என்ன? - அமெரிக்​கா​வில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவி​யேற்​றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்பு​களில் இருந்து வெளி​யேறு​வது, உலக சுகாதார நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறு​வது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்​கும் நிதி​யுதவியை நிறுத்து​வது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தர​வுகளை பிறப்​பித்​துள்ளார்.

குறிப்பாக அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்​படி, பிரேசில், மெக்​சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடு​களின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்​பப்​பட்டு வருகின்​றனர். அதன்​படி, சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்​பகல் 1.55 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்​தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலை​யத்தை வந்தடைந்​தது.

அமெரிக்க ராணுவ விமானத்​தில் நாடு திரும்பிய 104 பேரில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்​தவர்​கள். ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உ.பி.யை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் அடங்​கு​வர். முன்னதாக அமெரிக்​கா​வில் இருந்து 205 இந்தி​யர்கள் நாடு கடத்​தப்​பட்​டதாக தகவல் வெளி​யானது. எனினும், இந்தி​யர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்​பப்​பட்​டனர் என்று அதிகாரப்​பூர்​வமாக தகவல் வெளி​யிட​வில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்​களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசினார். பின்னர் ட்ரம்ப் கூறுகை​யில், ‘‘சட்​ட​விரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடி​யிடம் பேசினேன். அந்த விஷயத்​தில் எது சரியோ அதை இந்தியா செய்​யும் என்று தெரி​வித்​தார்’’ என்று கூறினார். இதையடுத்து இந்தி​யர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இதற்​கிடை​யில், வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்​கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்​படுத்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு​வார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்​கா​வில் 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இந்தி​யர்கள் சட்ட​விரோதமாக தங்கி​யிருப்​பதாக புளூம்​பெர்க் கடந்த ​மாதம் புள்ளி ​விவரம் வெளியிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x