Last Updated : 05 Jul, 2018 07:35 AM

 

Published : 05 Jul 2018 07:35 AM
Last Updated : 05 Jul 2018 07:35 AM

உத்தரபிரதேச மாநில தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த 8-ம் வகுப்பு படித்த சிறுவன்

திரைப்படங்களிலும் நடைபெறாத அளவிலான பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு பயின்ற ஒரு சிறுவன் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யின் முசாபர் நகரில் இருந்து பிரிந்த மாவட்டம் ஷாம்லி. இதன் ஆதர்ஷ் மண்டி பகுதியில் ’ஆர்யன் ஹாஸ்பிடல்’ எனும் பெயரில் ஒரு தனியார் மருத்துவமனை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் வீடியோ என சில தினங்களுக்கு முன் உ.பி.யில் ஒரு வாட்ஸ் அப் படப்பதிவு வெளியாகி வைரலானது. அதில், ஆர்யன் ஹாஸ்பிடல்’ எனும் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, அதில் இருந்தவர்கள் யாருமே அந்த அறுவை சிகிச்சை செய்யத் தகுதியில்லாதவர்கள் ஆவர். இதில் அறுவை சிகிச்சை செய்பவர், அந்த மருத்துவமனையின் உரிமையாளர் நர்தேவ்சிங்கின் மகன் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அருகில் இருந்த ஒரு செவிலியர் நோயாளியின் முதுகுத்தண்டில் மயக்க ஊசி போடும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. வேறு இருவரும் அக்காட்சியில் அருகில் நிற்கின்றனர்.

இதை கண்ட பலரும் அதிர்ச்சியுற்றனர். இன்னும் சிலர் அது உண்மையான வீடியோவாக இருக்காது எனக் கருதி அலட்சியம் காட்டினர். எனினும், அப்பகுதிவாசிகளால் அந்த பதிவு லக்னோவில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து, லக்னோவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆர்யன் மருத்துவமனைக்கு ஒரு அதிகாரிகள் குழு நேரில் கிளம்பி வந்தது. அப்போது அப்பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியும் அங்கு வந்து அதிகாரிகளிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார். எனினும், அதிகாரிகள் குழு அந்த வீடியோ பொய்யானது என நிரூபிக்க ஆர்யன் மருத்துவமனைக்கு மூன்று நாள் அவகாசம் அளித்து சென்றுள்ளது. இது நேற்றுமுன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், அடங்கி இருந்த விஷயம் நேற்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பாஜக ஆளும் உ.பி. மாநில மருத்துவ நலத்துறை அமைச்சர் சித்தார்தநாத் சிங் அந்த விடீயோ மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஷாம்லி மாவட்ட அரசு உதவி தலைமை மருத்துவ அதிகாரி அசோக்குமார் ஹண்டா கூறும்போது, ‘வீடியோவில் இடம் பெற்ற காட்சி அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது. எனவே, ஆரியன் மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை துவங்கி விட்டது. இந்த காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனைக்கு ஏற்கனவே மூன்று முறை சீல் வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் ஆரியன் மருத்துவமனையில் சுமார் 25 பேர் தவறான சிகிச்சையால் உயிர் இழந்துள்ளனர். எனினும், தமக்கு உ.பி. அரசியல்வாதிகளிடம் உள்ள செல்வாக்கின் காரணமாக உரிமையாளர் நர்தேவ்சிங் கைதாகாமல் தப்பி வருகிறார். எனினும், நான்கு குடும்பங்கள் ஆரியன் மருத்துவமனை மீது ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மீதான வழக்குகள் ஷாம்லி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலும் 10 ஆண்டுக்கு முன்பு..

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகள் கே.முருகேசன், எம்.காந்திமதியின் மகன், 11-ம் வகுப்பு படித்தபோது அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 2007-ல் கர்ப்பிணிக்கு இவர்களது மகன் திலீபன்ராஜ் மேற்கொண்ட அறுவை சிகிச்சையை வீடியோ எடுத்து, அதை இந்திய மருத்துவக் கழக கருத்தரங்கில் சக மருத்துவர்களுக்கு முருகேசன் காட்டியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு உருவானதால் முருகேசனின் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. முருகேசன், காந்திமதி ஆகியோரை வளநாடு போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையில், எம்பிபிஎஸ் முடித்த திலீபன்ராஜ், தற்போது மருத்துவ உயர்கல்வி படிப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x