ஊடுருவல், பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: அமித் ஷா உத்தரவு

ஊடுருவல், பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: அமித் ஷா உத்தரவு

Published on

புதுடெல்லி: ஊடுருவல் முற்றிலுமாக நிறுத்தப்படுவதை இலக்காகக் கொண்டு பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, "ஜம்மு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. மோடி அரசின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் சூழல் கணிசமாக பலவீனமடைந்துள்ளது. ஊடுருவலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவர் மீது அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளின் இருப்பிடத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஊடுருவல்காரர்கள், தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதைப்பொருள் கட்டமைப்பு ஆதரவளித்து வருகிறது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். புதிய குற்றவியல் சட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, தடயவியல் அறிவியல் ஆய்வகப் பணிகளில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in