Published : 05 Feb 2025 12:30 PM
Last Updated : 05 Feb 2025 12:30 PM

வங்கதேச துணை தூதரக விசா சேவைகள் அகர்தலாவில் மீண்டும் தொடக்கம்

இந்திய வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

புதுடெல்லி: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள தூதரகத்தில் இன்று (பிப். 5) முதல் விசா மற்றும் தூதரக சேவைகளை மீண்டும் தொடங்குவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ணா தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, அகர்தலாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் ஈடுபட்டன. அப்போது, தூதரகத்துக்குள் நுழைந்த சிலர், அங்கிருந்த அந்நாட்டு தேசிய கொடியை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, டிசம்பர் 3ம் தேதி முதல், அகர்தலா துணை தூதரக சேவைகளை வங்கதேச அரசு நிறுத்தியது. மேலும், அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதர் ஆரிஃப் மஹமத், டாக்காவுக்கு திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (பிப். 5, 2025) முதல் விசா மற்றும் தூதரக சேவைகளை மீண்டும் தொடங்குவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. "வங்கதேச துணை தூதரகத்தில் அனைத்து விசா மற்றும் தூதரக சேவைகள் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்" என்று அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலக முதன்மை செயலாளர் முகமது அல் அமின் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2024 சம்பவத்தைத் தொடர்ந்து, அகர்தலா துணை தூதரகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x