Published : 05 Feb 2025 11:40 AM
Last Updated : 05 Feb 2025 11:40 AM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் இன்று (பிப்.5) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை பறிப்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறது.
டெல்லியில் ஊழலுக்கு எதிராக 2011-ல் அன்னா அசாரே போராட்டத்தால் உதித்த கட்சி ஆம் ஆத்மி. இதன் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலின் வித்தியாசமான அரசியல் அணுகுமுறையால் ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி அமைத்தது. இதன் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62, பாஜக 8 எம்எல்ஏக்களைப் பெற்றன.
கேஜ்ரிவாலுக்கு முன்பாக தொடர்ந்து மூன்று முறை ஷீலா தீட்சீத்தை முதல்வராக்கி ஆட்சி செய்தது காங்கிரஸ். ஆனால், அக்கட்சிக்கு கடந்த 2015, 2020 தேர்தலில் ஒன்றில்கூட வெற்றி கிடைக்கவில்லை. இன்று பிப்ரவரி 5 வாக்குப்பதிவில் மூன்றாவது முறை தனிப் பெரும்பான்மையைப் பெறுவது ஆம் ஆத்மிக்கு பெரும் சவாலாகி விட்டது. மொத்தம் உள்ள 70 இல் 55 தொகுதிகளுக்கே வாய்ப்பு என ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் கணிக்கிறார்.
டெல்லியின் மதுபான வழக்கில் சிக்கி ஜாமீன் பெற்ற கேஜ்ரிவால், தனது கட்சியின் முக்கிய உறுப்பினரான அதிஷியை முதல்வராக்கினார். மீண்டும் தேர்தலை சந்திக்கும் தன்னை டெல்லிவாசிகள் தேர்வு செய்தால் முதல்வராவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதை டெல்லிவாசிகள் பெரிதாகப் பொருட்படுத்தும் நிலையை காணமுடியவில்லை.
ஆம் ஆத்மியின் வெற்றி, அவ்வளவு எளிதல்ல என்பதையும் கேஜ்ரிவாலுக்கு பாஜக புரிய வைத்து விட்டது. எந்த தேர்தலில் சந்திக்காத கைதுகள் உள்ளிட்ட நெருக்கடிகளை இந்தமுறை ஆம் ஆத்மி சந்திக்கிறது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் தொடர்ந்து ஆம் ஆத்மியின் தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
கடந்த தேர்தல்களில் புகார் கூறும் நிலையில் இருந்த ஆம் ஆத்மி இந்தமுறை பதிலளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தனது அரசின் சாதனைகளை முன்னிறுத்துவதை விட தம் பிரச்சார மேடைகளில் பாஜகவை சமாளிக்கவே ஆம் ஆத்மி கட்சிக்கு நேரம் போதாத நிலை. போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 8 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் பாஜகவிற்கு தாவினர்.
அதேசமயம், தாம் இருந்த இண்டியா கூட்டணியை விட்டு வெளியே வந்த ஆம் ஆத்மிக்கு அதன் இதர மூன்று உறுப்பினர்கள் ஆதரவும் கிடைத்துள்ளது. இதில், உபியின் முன்னாள் முதல்வரான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க மாநில முதல்வரான திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மற்றும் உத்தவின் சிவசேனாவும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மட்டுமே ஆம் ஆத்மிக்காகப் பிரச்சாரமும் செய்திருந்தார். டெல்லி தேர்தலில் இண்டியா கூட்டணியின் பிளவால், காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. இக்கட்சியின் முகங்களாக உள்ள ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா மற்றும் உள்ளூர் தலைவர்கள் அனைவரும் கேஜ்ரிவாலையே குறி வைத்து விமர்சித்தனர்.
பாஜகவை பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாகப் பேசியதாகத் தெரியவில்லை. டெல்லியில் 20 முதல் 25 வரையிலான தொகுதிகளில் உள்ள முஸ்லிம் மற்றும் தலீத் வாக்காளர்கள் காங்கிரஸின் பிரச்சாரக்குறியாகினர். இவர்களிடம் காங்கிரஸ் இழந்த செல்வாக்கு சற்று கூடியிருப்பினும் அது வெற்றியை தருமா? என்பது கேள்விக்குறியே.
பாஜகவிற்கு சாதகமான இந்த சூழலால், ‘காங்கிரஸிற்கு ஆதரவளித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம்’ என ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸுடன், ஐதராபாத் எம்பியான அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்களும் ஆம் ஆத்மிக்கு இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான எண்ணிக்கையில் சுயேச்சைகளின் போட்டியும் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ஆம் ஆத்மி வேட்பாளர் மீது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலே நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவிற்கு இடையேதான் நேரடிப்போட்டி நிலவுகிறது.
பாஜக பலன்பெறும் சூழல்: ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வீசும் அலையால் பாஜக பலன்பெறும் சூழல் உருவாகி உள்ளது. டெல்லி அரசின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல முக்கிய அதிகாரங்கள் மத்தியில் ஆளும் தலைமையான பாஜகவிடம் உள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆட்சிகளிலும் முதல்வராக இருந்த கேஜ்ரிவால், மத்திய அரசுடன் மோதும்நிலையால் டெல்லிவாசிகள் சலிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி அறிவிப்பு: முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லிவாசிகளுக்கு அளித்த பல இலவசத் திட்டங்கள் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கை அளித்தன. இவற்றை விட அதிகமான இலவசங்களை இந்த தேர்தலில் அறிவித்து விட்டது பாஜக. இத்துடன் தாம் ஆட்சிக்கு வந்தால், ஆம் ஆத்மி அரசின் இலவசத் திட்டங்கள் எதையும் பாஜக ரத்து செய்யாது என பிரதமர் நரேந்திரமோடியே தனது இறுதிகட்டப் பிரச்சாரத்தில் அறிவித்து விட்டார்.
முஸ்லிம் பகுதிகளில் பாஜக கூட்டங்கள்: வெளிமாநிலவாசிகள் பெருமளவில் உள்ள டெல்லியில், பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருமே ஆதரவுப் பிரச்சாரம் செய்திருந்தனர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் பிரச்சாரக் களத்தில் இறக்கியது பாஜக. தன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சுமார் 50,000 சிறு கூட்டங்களை டெல்லி தேர்தலுக்காக நடத்தியது. இதை முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும் பாஜகவினருடன் இணைந்து நடத்தினர்.
ஆம் ஆத்மியின் புகார்கள்: பாஜக, ஒவ்வொரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் முன்னிறுத்தும் இரட்டை எஞ்ஜின் குரலையும் டெல்லியில் முன்னெடுக்கத் தவறவில்லை. எனவே, இந்தமுறை டெல்லியில் பாஜக அலை வீசுவதாகக் கருதப்படுகிறது. இதுவன்றி, சேலை, குளிருக்கான கம்பளி மற்றும் ரொக்கத்தையும் பாஜக வாக்களர்களுக்கு வெளிப்படையாக விநியோகிக்கும் புகாரையும் ஆம் ஆத்மி முன் வைக்கிறது.
பிப்ரவரி 8-ல் முடிவுகள்: இதுபோன்ற நடவடிக்கைகள் உண்மையானால் அது, டெல்லியின் வாக்காளர்களுக்கு புதிய அனுபவம் ஆகும். இதன்மூலம், டெல்லியில் அதிகமுள்ள குடிசைப் பகுதி மற்றும் நடுத்தர வாக்காளர்கள் குறி வைக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் உள்ளன. இந்தவகைப் புகார்கள் எழும் தேர்தல்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வாழ்வா? சாவா? டெல்லியில் தொடர்ந்துஆட்சி செய்த கட்சியான ஆம் ஆத்மிக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்ற சவாலாகி உள்ளது. ஏனெனில், இங்கு ஏற்படும் தோல்வியால், ஆம் ஆத்மியின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடும். இதேபோன்ற சவாலை நாட்டின் தலைநகரில் ஆட்சியை பிடிக்க பாஜக எதிர்கொள்கிறது. இதன் வெற்றி, மக்களவை தேர்தலில் பாஜக இழந்த செல்வாக்கை மீட்க உதவும். டெல்லியின் தேர்தலின் முடிவு பிப்ரவரி 8-ல் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT