Published : 05 Feb 2025 02:12 AM
Last Updated : 05 Feb 2025 02:12 AM
கட்டாய மத மாற்ற தடைச் சட்ட மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்ட மசோதா நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநில சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் இதனை அறிமுகம் செய்தார். கட்டாயப்படுத்தியும் தூண்டுதலின் பேரிலும் மோசடியாகவும் மற்றும் திருமணம் மூலமும் மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்படுகிறது.
இது போன்ற மதமாற்றங்களை கைது செய்யக்கூடிய மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட்டு, குற்றவாளிகளாக கண்டறியப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த மசோதாவின்படி விருப்பத்தின் பேரில் மதம் மாற விரும்புவோர் மாவட்ட ஆட்சியரிடம் 60 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். முற்றிலும் திருமணத்துக்காக மட்டும் மதமாற்றம் நிகழ்ந்ததாக நிரூபணமானால் அத்தகைய திருமணங்கள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும்.
இந்த மசோதா குறித்து அரசு கூறுகையில், “மத சுதந்திரத்திற்கான தனிப்பட்ட உரிமையை மதமாற்றம் செய்வதற்கான கூட்டு உரிமையாக யாரும் மாற்ற முடியாது. ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு மதமாற்ற தடை சட்டத்தை மீறியதாக கண்டறியப்பட்டால் அதன் பதிவு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT