Published : 05 Feb 2025 02:05 AM
Last Updated : 05 Feb 2025 02:05 AM
சட்டவிரோதமாக நமது நாட்டில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்காக முகூர்த்த நேரத்துக்காக காத்திருக்கிறீர்களா என்று அசாம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) முகாமின் அடிப்படையில் அந்த மாநிலத்தில் 63 பேர் வெளிநாட்டினர் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் புகுந்து வசித்து வந்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்த மாநில அரசு, அவர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அசாம் மாநில அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது நீதிபதி அபய் எஸ். ஓகா கூறும்போது, “அவர்கள் வெளிநாட்டினர் என்று தெரிந்தும் ஏன் அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவர் வெளிநாட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை நாடு கடத்தி விடுங்கள் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
வெளிநாட்டினரின் முகவரி தெரியவில்லை எனக் கூறி நாடு கடத்தும் செயலைத் தொடங்க மறுத்துவிட்டீர்கள். அது ஏன் எங்கள் கவலையாக இருக்க வேண்டும்? நீங்கள் அவர்களை வெளிநாட்டுக்கு நாடு கடத்துங்கள். அவர்களை நாடு கடத்துவதற்கு முகூர்த்த நேரம் வரும் வரை காத்திருக்கிறீர்களா?” என்றார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட தாமதத்துக்கு வருந்துகிறோம். விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “இதுதொடர்பாக உத்தரவை நாங்கள் பிறப்பிக்கிறோம். இந்த விஷயத்தில் நீங்கள் உண்மையாக நடந்து கொண்டிருக்கவேண்டும். வெளிநாட்டவர்களை நீண்ட நாள் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது. அசாம் மாநிலத்தில் ஏராளமான தடுப்பு முகாம்கள் உள்ளன. அந்த முகாம்களில் இருந்து இதுவரை எத்தனை பேரை நாடு கடத்தியுள்ளீர்கள்?
சம்பந்தப்பட்ட 63 பேரை அவர்களது நாட்டின் தலைநகருக்கு நாடு கடத்துங்கள். இதில் யாராவது ஒரு நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கலாம். பாகிஸ்தானின் தலைநகர் எது என்று உங்களுக்குத் தெரியும்தானே? வெளிநாட்டினரின் முகவரி தெரியாது என்று இன்னும் எத்தனை நாள் அவர்களை இங்கேயே வைத்திருக்கப் போகிறீர்கள்?” என்று தெரிவித்தனர்.
மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 63 பேரை நாடு கடத்தும் நடவடிக்கையை 2 வாரங்களுக்குள் தொடங்கி, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT