Published : 04 Feb 2025 03:30 PM
Last Updated : 04 Feb 2025 03:30 PM
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நபரால் நடத்தப்படக்கூடிய அமைப்பு அல்ல என்றும் அது 3 நபர்களைக் கொண்ட அமைப்பு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 18-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், “தேர்தல் நடத்தை விதிகளை பாஜக மீறுவதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் புறக்கணித்து வருகிறது. ஓய்வுக்குப் பிறகான அரசு பணியைப் பெறுவதற்காக ராஜீவ் குமார் பாஜக மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.” என நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "டெல்லி தேர்தலை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்ய வேண்டுமென்ற நோக்கிலும், அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் செயல்கள் நடைபெறுவதை 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் கூட்டாகக் கவனித்தது.
தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளன. அரசியலமைப்பு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், புத்திசாலித்தனத்துடன் செயல்படவும், குற்றச்சாட்டுகளுக்கு அடிபணியாமல் இருக்கவும் முடிவு செய்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “இன்று தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இல்லாதது போல தோன்றுகிறது. இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுவது குறித்து மக்கள் மனதில் பல கேள்விகள் எழுவது நியாயமானதே. ஓய்வுக்குப் பின்பு அவருக்கு என்ன மாதிரியான பதவிகள் வழப்படும்? ஆளுநர் பதவியா அல்லது குடியரசுத் தலைவர் பதவியா? நான் ராஜீவ் குமாரிடம் இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் கடமையைச் செய்யுங்கள், பதவிக்கான பேராசையை விட்டுவிடுங்கள். உங்களின் பதவிக் காலத்தின் இறுதியில் நாட்டை, நாட்டின் ஜனநாயகத்தை அழிக்காதீர்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மீண்டும் தலைநகரில் அதிகாரத்தைப் பிடிக்க தீவிரம் காட்டிவருகின்றன. இதனால் டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT