ராமநாதபுர குடிநீர் பிரச்சினையை தீர்க்க சிறப்புத் திட்டம்: நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

ராமநாதபுர குடிநீர் பிரச்சினையை தீர்க்க சிறப்புத் திட்டம்: நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: ராமநாதபுரத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரிவான புதிய திட்டத்தை அறிவிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது. இதை அதன் மக்களவை தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்.பி.யான கே.நவாஸ்கனி வலியுறுத்தினார்.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யான நவாஸ்கனி நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-ன் கீழ் பேசியதாவது: என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வறட்சியான பகுதி. வற்றாத நீர்நிலைகள் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த நீர் நிலைகளும் இல்லாத பகுதி. எனவே விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலை உள்ளது.

இதற்காக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் எனது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும். இதனால், வைகை ஆற்று தண்ணீர் அனைத்து கண்மாய்களையும் சென்றடையும். இதை அமலாக்கி விவசாயம் செழிப்பதற்கும் சிறப்பு திட்டத்தினை மத்திய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். காட்டாற்று வெள்ளம் வரக்கூடிய வரத்து கால்வாய்களில் மழைநீர் சேகரிப்பு ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கலாம்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும், நகரங்களிலும், தெருக்களிலும் ரீசார்ஜ் போர்வெல் உருவாக்க வேண்டும். இதன்மூலம், ராமநாதபுரத்தின் நிலத்தடி நீர் நிலை உயரும். நிலத்தடி நீரை மேம்படுத்தி குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டத்தினை மத்திய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in