Published : 04 Feb 2025 01:39 AM
Last Updated : 04 Feb 2025 01:39 AM
இறந்த தந்தையின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தந்தையின் உடலில் பாதியை கோரிய வினோத சம்பவம் ம.பி.யில் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் ஊருக்கு வெளியில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்தார்.
மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்ய வேண்டும் என்றார். ஆனால் இதனை அவரது தம்பி தேஷ்ராஜ் ஏற்கவில்லை. இறுதிச் சடங்குகளை தான் செய்யவேண்டும் என்பதே தந்தையின் விருப்பம் என்றார். இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மதுபோதையில் இருந்த கிஷன் இறுதிச் சடங்கு செய்ய தந்தையின் உடலில் பாதியையாவது தர வேண்டும் என்று பிறகு தகராறு செய்யத் தொடங்கினார்.
செய்வதறியாது திகைத்து நின்ற கிராம மக்கள் இதுகுறித்து ஜதாரா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT