Published : 03 Feb 2025 04:16 PM
Last Updated : 03 Feb 2025 04:16 PM

“பிரதமர் முயற்சித்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி”- மக்களவையில் ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லி: "பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முயற்சி செய்தார். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினார். ‘மேக் இன் இந்தியா’ தோல்வியால் சீனா இந்தியாவுக்குள் நுழைந்தது" என்று ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மனத்தில் கலந்து கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக என்ன சொல்லப்படுகிறது என்பதை கவனிக்க முடியாமல் நான் தவித்தேன். ஏனெனில் அதே குடியரசுத் தலைவர் உரையைத்தான் கடந்த முறையும், அதற்கு முன்பும் கேட்டிருந்தேன். இந்த உரையும் அரசு செய்த விஷயங்ளின் அதே பழைய உரைதான். அதே 50, 100 திட்டங்களைப் பற்றி பேசினார்கள்.

குடியரசுத் தலைவரின் உரை இப்படி இருக்கக் கூடாது. அது எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன். இண்டியா கூட்டணி ஆட்சியின் குடியரசுத் தலைவர் உரை என்றால் அதில் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது. அதனால் அரசின் எந்த உரையாக இருந்தாலும் அது முக்கியமாக இளைஞர்களுக்கானதாகவும் இருக்க வேண்டும்.

நாம் வளர்ந்துள்ளோம், வேகமாக வளர்ந்துள்ளோம். ஆனால் நாம் இன்னும் வளரும் நாடாகவே இருந்து கொண்டிருக்கிறோம். நமது பொதுவான பிரச்சினை வேலைவாய்ப்பின்மையை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதே. அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ அல்லது இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ இந்த நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தெளிவான பதிலை அளிக்கவில்லை. இதை இந்த அவையில் யாரும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை முன்மொழிந்தார். அது நல்லதொரு யோசனை. அதன் முடிவுகள் உங்கள் முன்பு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 15.3 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தற்போது 12.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் குறைவான உற்பத்தி பங்களிப்பாகும். நான் பிரதமரை குறைகூறவில்லை. அவர் முயற்சி செய்யவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. அவர் முயற்சித்தார் ஆனால் தோல்விடைந்தார் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு நாடும் அடிப்படையில் இரண்டு விஷயங்களை ஒருங்கிணைக்கிறது. நீங்கள் நுகர்வினை ஒழுங்கமைக்க முடியும், அடுத்து உற்பத்தி. நுகர்வினை ஒழுங்கமைக்கும் நவீன வழி சேவைகள், உற்பத்தியை ஒழுங்கமைக்கும் நவீன வழி பொருள் உற்பத்தி, அதிக அளவில் உற்பத்தி செய்வதை விட அதற்கான பொருட்களை உற்பத்தி செய்வதே சிறந்தது.

ஒரு நாடாக உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் நாம் தோல்வியைந்துள்ளோம். நம்மிடம் உற்பத்தியை ஒருங்கிணைக்கும் சிறந்த நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அடிப்படையில் நாம் செய்தது என்னவென்றால் உற்பத்தி அமைப்பை நாம் சீனர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த மொபைல் போன், இதனை நாம் இந்தியாவில் உருவாக்கினோம் என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த போன் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. அது இந்தியாவில் அசம்பிள் செய்யப்பட்டது. இதற்கான அனைத்து உற்பத்தி பொருட்களும் சீனாவில் உருவாக்கப்பட்டது. நாம் சீனாவுக்கு வரி செலுத்துகிறோம்.

நமது நாட்டு எல்லைக்குள் சீனர்கள் ஊடுருவி உள்ளார்கள் என்று நம் ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். இது உண்மை. அதற்கான காரணம் மிகவும் முக்கியமானது. சீனா நமது எல்லைக்குள் இருப்பதற்கான காரணம் மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியே. இந்தியா உற்பத்தி செய்ய மறுப்பதே சீனா நமது எல்லைக்குள் இருப்பதற்கான காரணம். இந்தியா இந்தப் புரட்சியை மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்து விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x