

பாலியல் பலாத்கார புகார் எழுப்புவது தற்போது பேஷன் ஆகி விட்டது என்று குறிப்பிடப்பட்ட சிவசேனை கட்சியின் கட்டுரைக்கு, மும்பை முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது பாலியல் புகார் கூறிய பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த பிரபல மாடல் ஒருவர், மும்பை முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் என்பவர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகார் குறித்து சுனில் பரஸ்கரிடம் விசாரணை நடத்தி அதன் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிவசேனையின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், சுனில் பரஸ்கருக்கு ஆதரவு தரும் விதமாக இன்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
" உயர் பிரிவைச் சேர்ந்த பெண்கள், தங்களது தனிப்பட்ட ஆதாயத்திற்காக, நாட்டில் அந்தஸுத்துள்ளவர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை கிளப்புகின்றனர். பிறரது நற்பெயர் குறித்து அவதூறு செய்வதை இவர்கள் பேஷனாக கருதுகின்றனர்.
ஆறு மாத காலத்துக்கு முன்னர், பலாத்காரம் செய்யப்பட்டதாக நிதானமாக வந்து, இந்த பெண் புகார் கூறுவது ஏன்? இந்த கேள்வி அனைவருக்கும் எழும், ஆனால் காவல்துறையினருக்கு இது ஏன் புரியவில்லை என்று தெரியவில்லை" என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கட்டுரைக்கு பதில் தரும் விதமாக பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, "இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில், கருத்து கூறுவதே தவறு. முதலில் கருத்து கூறுபவர்கள் உண்மையை தெரிந்து பேச வேண்டும். நான் சுனில் பரஸ்கரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்படி என்றால், அதற்கான ஆதாரத்தை சுனில், ஊடகங்களிடன் வெளிப்படையாக காண்பிக்கலாம்.
முக்கிய பிரமுகருக்கு மரியாதை அளிக்க வேண்டுமா? எப்படி, பலாத்காரத்துக்கு ஆளான ஒரு பெண், தன்னை பலாத்காரம் செய்த நபரை மரியாதையுடன் பார்க்க முடியும்?
நான் போலீஸிடம் புகார் கூற காலதாமதமானது தான். அதற்கு காரணம் நான் பயத்தில் இருந்தேன். அதற்கு காரணம், சுனில் பரஸ்கர் கூடுதல் ஆணையராக இருந்தார். அப்போது நான் குற்றசாட்டு கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயம் இருந்தது. தற்போது கூட, சிவ சேனை உள்ளிட்ட சிலரது ஆதரவு இருப்பதால் தான், சுனில் பரஸ்கர் மிகவும் தைரியமாக செயல்படுகிறார்.
பரஸ்கர் , குற்றவாளி இல்லை என்றால், அவர் என் மீது அவதூறு வழக்கு தொடரலாம். ஆனால் அதற்கு மாறாக, அவரது மனைவி ஏன் என்னை தொடர் கொண்டு பேச வேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.