Published : 02 Feb 2025 01:38 PM
Last Updated : 02 Feb 2025 01:38 PM
புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத்துக்கு இன்று (பிப்.2) கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி தொகுதிக்கு தனியாக தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று அவர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கிய பாஜகவினரைக் கைது செய்யவேண்டும், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், "டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, புதுடெல்லி தொகுதியில் பாஜகவினர் மற்றும் டெல்லி காவல்துறையும் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் மிரட்டல் குறித்த கவலையை வெளிப்படுத்தவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
எனது கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர், திலக் மார்க் காவல் நிலையகத்தில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அவர்மீது பிஎன்எஸ்எஸ் பிரிவு 123-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் கற்பனையாக, அவர்மீது பழைய வழக்குகள் இருப்பதாகக் கூறி தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எந்த வழக்குகளும் இல்லை.
எனது கட்சிக்கார்கள் செய்யாத குற்றங்களுக்காக வெட்கக்கேடான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும் மயக்கம் வரும் அளவுக்கு காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். எனது புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
பாஜக தொண்டர்கள் எங்களின் (ஆம் ஆத்மி) கட்சித் தொண்டர்களின் குடும்பங்களை அச்சுறுத்தும் அளவிற்கு சென்றுவிட்டனர். அவர்களின் உடைமைகளை அழிக்கப்போவதாக மிரட்டியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “பாஜகவினர் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது, அதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றியை நோக்கி பயணத்தி வருகிறது" என்றார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சனிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் புதுடெல்லி தொகுதியில் பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை தாக்கி அவர்களைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தனர் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் சந்தீப் திக்ஷித்தும் போட்டியிடுகின்றனர். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி பேரவைக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT