

புதுடெல்லி: மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கடந்த ஆண்டு நமது அண்டை நாடான மாலத்தீவுகளுக்கு நிதிஉதவியாக ரூ.470 கோடியை இந்தியா வழங்கியது. இது வரும் நிதியாண்டில் ரூ.600 கோடியாக அதிகரிக்கப்படும்.
வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியுதவி ரூ.4,883 கோடியிலிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்கப்படும். மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.20,516 கோடி ஒதுக்கப்படும். இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கு இந்தியா நிதியுதவியை அவ்வப்போது அளித்து வருகிறது. இந்த நிதி மூலம் அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அந்தவகையில் தான் தற்போது மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடியை இந்தியா வழங்கவுள்ளது.
இதேபோல் பூடானுக்கு ரூ.2,150 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.100 கோடியும், மியான்மருக்கு ரூ.350 கோடியும், நேபாளத்துக்கு ரூ.700 கோடியும், இலங்கைக்கு ரூ.300 கோடியும், வங்கதேசத்துக்கு ரூ.120 கோடியும் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.