

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டம் கங்காளூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மாநில காவல் துறையின் டிஆர்ஜி படை வீரர்கள், எஸ்டிஎப் படை வீரர்கள், கமாண்டோ படை வீரர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து கங்காளூர் வனப்பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர்.
அப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த சண்டையில் 8 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி சுந்தர்ராஜ் கூறும்போது, “சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாடுவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
50 தீவிரவாதிகள்: கடந்த 20-ம் தேதி சத்தீஸ்கரின் கரியாபந்து வனப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 16 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். தற்போது 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 30 நாட்களில் மட்டும் 50 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்” என்று தெரிவித்தார்.