முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்

நவீன் சாவ்லா | கோப்புப் படம்
நவீன் சாவ்லா | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்று (பிப்.1) காலமானார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவின் மறைவு குறித்து அறிந்து வருத்தினேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” குறிப்பிட்டுள்ளார்.

மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நவீன் சாவ்லா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று (பிப்.1) மாலை 5 மணிக்கு டெல்லி கிரீன் பார்க் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1969-ஆம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த நவீன் சாவ்லா, தனது பணிக்காலத்தில், டெல்லி, கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அரசாங்கங்களிலும், தொழிலாளர், உள்துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களிலும் பணியாற்றி உள்ளார். 2005-ஆம் ஆண்டு, அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல், 2009-இல் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். தனது பதவிக் காலத்தில், ஏப்ரல் - மே 2009-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

அன்னை தெரசாவுடன் நவீன் சாவ்லாவுக்கு நீண்ட நட்பு இருந்தது. ஓர் இளம் அரசு ஊழியராக அன்னை தெரசாவை முதலில் சந்தித்த நவீன் சாவ்லா, அவருடன் வாழ்நாள் முழுவதும் நட்பை பேணி வந்தார். அவரது பணிகளில் அவருக்கு உதவினார். "அன்னை தெரசா" என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை 1992-ஆம் ஆண்டு எழுதினார்.

தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பாரபட்சத்துடன் நடந்ததாக பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்க அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி அரசுக்கு பரிந்துரைத்தார். எனினும், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அந்த பரிந்துரையை நிராகரித்தார். அவரை நீக்கக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in