

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் சன்னா துர்கப்பா (45) பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய பேராசிரியர்கள் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், கோவிந்த ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஷ்வேஸ்வரையா, ஹர கேவிஎஸ் தாசப்பா, பல்ராம், பி ஹமலதா மிஷி, சட்டபாத்யாயா கே, பிரதீப் டி சௌகர், மனோகரன் ஆகியோர் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், “பட்டியலினத்தை சேர்ந்த என்னை பொய்யான வழக்கில் சிக்க வைத்து, சாதி ரீதியாக 18 பேராசிரியர்கள் திட்டினர். என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர். சம்பந்தப்பட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினார்.
10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், ‘‘குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் மீது சதாசிவ நகர் போலீஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்” என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 18 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார், இந்த வழக்கை விசாரிக்க போலீ ஸாருக்கு இடைக்கால தடை விதித்தார். இதுகுறித்து கர்நாடக அரசு 14 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.