

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை மீதான சோனியா காந்தியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இக்கருத்துக்கு பாஜக, குடியரசுத் தலைவர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் உரை குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, “உரையின் கடைசிப் பகுதியை வாசிக்கும்போது குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை.. பாவம்!” என்றார். அப்போது உடனிருந்த ராகுல் காந்தி தனது தாய்க்கு உதவிடும் வகையில், “சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்" என்றார்.
சோனியா காந்தியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், “மிக உயர்ந்த அரசியலமைப்பு சட்ட பதவியின் கண்ணியத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதையே இது காட்டுகிறது. துரதிருஷ்டவசமாக இது தனி ஒரு சம்பவம் அல்ல. இத்தகைய வார்த்தைகளை காங்கிரஸ் வேண்டுமென்றே பயன்படுத்துவது ஏழை மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அக்கட்சியின் இயல்பையே காட்டுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
பாஜக எம்.பி. சுகந்த மஜும்தார் கூறுகையில், “இது தரக்குறைவான கருத்து. சோனியா, ராகுல் போன்ற தலைவர்கள் இவ்வாறு பேசக்கூடாது. ஆதிவாசி குடும்பத்தை சேர்ந்த முர்மு, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்றார்.
சோனியா காந்தியின் கருத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகையும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் உயர்ந்த பதவியின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை. விளிம்புநிலை சமூகங்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக பேசுவது ஒருபோதும் சோர்வை ஏற்படுத்தாது என்று அவர் நம்புகிறார். இதுபோன்ற கருத்துகள் மோசமானவை, துரதிருஷ்டவசமானவை, முற்றிலும் தவிர்க்கக்கூடியவை" என்று கூறப்பட்டுள்ளது.