Published : 10 Jul 2018 07:26 PM
Last Updated : 10 Jul 2018 07:26 PM

வைரம் பட்டைத்தீட்டும் தொழிலா? தற்கொலைகளை உற்பத்தி செய்யும் ஆலையா?: சூரத் தொழிலாளர்களின் துயரக்கதை

நியூயார்க் முதல் ஹாங்காங் வரை ஆடம்பர நகைக்கடைகளை அலங்கரிப்பதற்காக வைரக்கற்களை நறுக்கி மெருகேற்றும் அன்றைய 10 மணி நேர கொடூரமான பணி முடிந்த பிறகு சூரத்தைச் சேர்ந்த விக்ரம் ராவ்ஜிபாய் என்பவர் தனது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியே செல்லக் காத்திருந்து முன் கதவைத் தாளிட்டுக் கொண்டார்.

பிறகு தன் மேல் கெரசினை ஊற்றிக் கொண்டு தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய உறவினர்கள் எரிந்த சாம்பலுமாய், கட்டையுமாய்க் கிடக்கும் ராவ்ஜிபாயின் உடலைக் கண்டு கதறி அழுதனர். இந்தியாவின் ‘பெருவளர்ச்சி’ காணும் வைர நகை தொழிற்துறையில் அடிமட்ட கூலிக்கு வேலை பார்க்கும், மோசமான பணிச்சூழலில் வேலை பார்க்கும் பல்வேறு தொழிலாளர்களின் தற்கொலைத் தொடரில் தொடர் தற்கொலைகளில் ராவ்ஜிபாயும் இணைந்தது அப்படித்தான்.


டயமண்ட் தொழிலில் மோசமான பணிச்சூழல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை விசாரணை நடத்திக் கண்டுபிடித்த பல தகவல்கள் நம்மை உலுக்குபவை.

குஜராத்தில் ஓராண்டாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தற்கொலைகளில் ஒரே மாதிரித்தன்மை தெரியவந்துள்ளது. பலரும் மவுனச்சிறைக்குள் தள்ளப்பட்டனர். 90% கற்களை வெட்டி மெருகேற்றி உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யும் இந்த வைரம் பட்டைத்தீட்டும் தொழிலில் வேலையாட்களுக்கு கல் ஒன்றுக்கு இத்தனை என்று கூலி கொடுக்கப்படுகிறது.

 

இந்தத் தொழிலில் உள்ளவர்களில் சிலருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. அதாவது சிலருக்கு மட்டுமே நிரந்தர சம்பளம். மாதம் ரூ.1 லட்சம் வரை கூட சிலர் சம்பாதிக்கின்றனர். ஆனால் இந்தத் தொழிற்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினர் ஒரு கல்லுக்கு ரூ.1 முதல் 25 ரூபாய் வரை கூலி பெறுகின்றனர். சமூகப் பாதுகாப்பு, பயன்கள் இல்லை.

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வைரம் பட்டைத்தீட்டும் பட்டறை உரிமையாளர்கள், புரோக்கர்கள், தொழிலாளர் குழுக்கள், இவர்களது குடும்பத்தினர் மற்றும் போலீசார் ஆகியோரிடம் பேட்டி கண்டுள்ளது. இதில் கடந்த நவம்பரிலிருந்து 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது சூரத் நகரில் மட்டும். சூரத் வைர வியாபாரத்தின் கோட்டையாகும், இங்கு சவுராஷ்டிரா பகுதியிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் பலருண்டு.

இந்தத் தொழிற்துறையின் பணப்பெருக்கமும் வளர்ச்சியும் 10 ஆண்டுகளில் 70% வளர்ந்துள்ள ஏற்றுமதியும் தொழிலாளர்களின் நிலை, தற்கொலைகளுக்கு எந்த விதத்திலும் சம்பம்தமில்லாததாக இருக்கிறதே என்று கேட்ட போது இந்த விவகாரம் பனி மலையின் வெளியே தெரியும் ஒரு முகடு மட்டுமே என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படவில்லை என்பதற்கான சான்றளிப்பு நடைமுறைகள் இல்லை.

ஆனால் குடும்பத்தினர்கள் இதற்குக் காரணமாக வைரப் பட்டறைத் தொழிலைக் கூறவில்லை, ஏனெனில் சுமார் 15 லட்சம் பேர் இதில் பணியாற்றி வருகின்றனர். சவுராஷ்டிராவில் கடும் வறட்சி காரணமாக வாழ்வாதாரம் தேடி இதில் வந்து விழ வேண்டியுள்ளது, இதில் எதிர்ப்பு காட்டினால் வேலையும் போய் நிற்க வேண்டியதுதான் என்கிறார்கள்.

மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்ட ராவ்ஜிபாயின் தாய் வசன்பென் இன்னமும் கூட தன் மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். இவரது கணவனுக்குப் பிறகு குடும்பத்தில் குறைந்த கூலியாக இருந்தாலும் சம்பாதிக்கும் ஒரே நபர் ராவ்ஜிபாய்தான். ராவ்ஜிபாயின் தந்தையும் வைரப்பட்டறையில் வேலை செய்தவர்தான், 10 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பில் காலமானார்.

“விக்ரம் தன் 16 வயதில் பட்டைத்தீட்டும் தொழிலில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு அதிக வேலைகள் கிடைப்பதில்லை” என்று தன் மகன் தற்கொலை செய்து கொண்டு இறந்த அறையின் திரைச்சீலைகளை இழுத்து விட்டபடியே கூறினார் வசன்பென்.

சவுராஷ்டிராவில் குடிசைப்பகுதியில் வசிக்கும் வசன்பென் தன் மகன் எகிறும் செலவுகளைக் கண்டு பயந்தார் என்றும் காதலும் இல்லை திருமணமும் இல்லை, இவையெல்லாம் அவரை பெருமளவு மன உளைச்சலுக்குத் தள்ளியதாக வசன்பென் தெரிவித்தார்.

“மாதம் 6,000 தான் வருமானம், நாங்கள் 7 பேர். எப்படிப் போதுமானதாக இருக்கும்? நான் நிலைமைகள் சரியாகி விடும் என்று அவனுக்கு ஆறுதல்தான் கூற முடிந்தது, ஆனால் அன்றைய தினம் நாங்கள் திருமணத்துக்காக வெளியில் செல்லக் காத்திருந்து பிறகு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்” என்றார்.

தற்கொலைக் கோப்புகள்:

கற்கள் பட்டைத்தீட்டும் திறமை, குறைவான கூலி ஆகியவற்றினால் உலகின் அதிக வைரம் உற்பத்தி செய்யும் டிபியர்ஸ் முதல் ரஷ்யாவின் அல்ரோசா வரை இந்தியாவில்தான் தங்கள் வைரங்களை பட்டைத்தீட்டி பெறுகின்றன.

டிபியர்ஸ், இது ஆங்கிலேய அமெரிக்க குழுமமாகும், உலகின் 2வது மிகப்பெரிய வைரச்சுரங்க நிறுவனமான ரியோ டிண்ட்டோ, ரஷ்யாவின் அல்ரோசா ஆகியோரிடம் தொழிலாளர்கள் தற்கொலைப் பற்றி கேட்ட போது, தாங்கல் பட்டைத்தீட்டப்படாத வைரங்களை அனுப்பும் நிறுவனங்களிடமிருந்து தாங்கள் இத்தகைய புகார்களை எதிர்கொள்ளவில்லை என்று பதிலளித்தனர்.

அரசு அதிகாரிகளோ, தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம், பள்ளிகள், மருத்துவமனைகள், தற்கொலையோ, மரணமோ தொழிலாளர்களின் உறவினர்களுக்கு வேலை என்று தொழிற்துறை உடன்பாட்டுத் தன்மையுடனேயே செயல்படுகிறது என்று கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறும்போது சில தொழிற்சாலைகள்தான் ஏ/சி வசதியுடன் உள்ளன, மற்றபடி சிறு பட்டரைகள் மிகவும் மோசமாக உள்ளது, தொழிலாளர்கள் அடிமைகள் போல்தான் வாழ்ந்து வருகின்றனர் என்றனர்.

இந்தியாவுக்கு அனுப்பப்படும் கச்சா நிலையிலுள்ள வைரங்களை இந்தியா இறக்குமதி செய்யும் போது அவை ‘பிரச்சினைகளற்றது’ என்று கிம்பர்லி புரோசஸ் ஸ்கீம் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதாவது இதனால் சமூகப்பிரச்சினைகள், தொழிலாளர் பிரச்சினைகள் இல்லை என்ற சான்றிதழ் அளிக்கப்படுவது அவசியம். ஆனால் வெட்டப்பட்டு மெருகேற்றப்படும் பட்டைத்தீட்டப்படும் வைரங்களுக்கு லாபநோக்கற்ற ‘ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி கவுன்சில்’ சான்றிதழ் என்பது விருப்பத்தெரிவு சார்ந்ததே.

குஜராத்தில் உள்ள சுமார் 15,000 பெரிதும் சிறிதுமான வைரப்பட்டறைகளில் 90 மட்டுமே ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி கவுன்சில் உறுப்பினர்களாவர். இதில் 30 நிறுவனங்கள் மட்டுமே டிபியர்ஸிடமிருந்து கச்சா வைரத்தை வாங்குகிறது, ஆகவே முறையாக தொழிலாளர்கள் நலவிதிகள் பராமரிக்கப்படுகின்றன என்ற சான்றிதழ் இதற்கு அவசியம்.

மத்திய அரசு ஜெம் அண்ட் ஜுவல்லரி ஏற்றுமதி மற்றும் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கியது, ஆனால் வைரப்பட்டறை உரிமையாளர்கள்தான் சான்றிதழ் பெற வேண்டும் என்று பிரச்சினையை அப்பக்கம் தள்ளிவிடுகிறது.

ஆகவே தொழிலாளர்கள் பலரும் தங்கள் அன்றாட உணவுக்கும், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் விழிப்புணர்வு சமூக ஆர்வலர்கள். இவ்வளவு பெரிய தொழிற்துறை, மிகவும் வளமான ஒரு துறையில் 25% தொழிலாளர்கள்தான் போதுமான ஊதியம் பெறுகின்றனர்.

போலீஸ் கோப்புகளிலிருந்து பெறப்படும் தற்கொலைப் பதிவுகள் ஒரேமாதிரியான தற்கொலைகள் என்பதை அறிவுறுத்துகிறது, வெளிப்படையாக எந்த பிரச்சினையும் இல்லாதவர் என்று தெரிபவர் ஒருநாள் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார்.

சூரத் நகரில் மட்டும் 2010-முதல் சுமார் டயமண்ட் தொழிலாளர்கள் பணியாற்றும் பகுதிகளிலிருந்து மட்டும் 5,000 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இந்தத் தகவலை தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையிடம் போலீஸ் துறை பகிர்ந்து கொண்டுள்ளது.

 

போலீஸ் விசாரணைகள்:

போலீஸ் அதிகாரியான ஆகாஷ் தோதியா 2 தற்கொலைகளை விசாரித்த அதிகாரியாவார். 20 முதல் 22 வயது வரை உள்ள இந்த 2 தொழிலாளர்கள் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர்.

பம்மார் என்ற ஒரு வாலிபர் சூரத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாக வந்து வைரப்பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த ஆண்டு ஏப்ரலில் இவர் வேலை செய்த இடத்திலேயே விஷம் அருந்தி மாண்டார்.

“இவரது பணி வைரக்கற்களுக்கு இறுதி டச் கொடுப்பதாகும். 10 மணி நேரம் ஒருநாளில் வேலைப் பார்க்க வேண்டும். ஒருநாள் பட்டறையிலிருந்து அழைப்பு வந்தது, நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் பயனில்லை அவர் உயிர் பிரிந்தது” என்று கூறினார் அவரது உறவினர்.

தோதியா என்ற போலீஸ் உயரதிகாரி, தற்கொலைகளுக்கும் டயமண்ட் பிசினசுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்கிறார், ஆனால் மற்ற போலீஸ் அதிகாரிகளோ தொடர்பு இருக்கிறது என்கின்றனர்.

கற்கள் தொழிலில் உலக அளவில் தேவை குறையும் போது பட்டறை உரிமையாளர்கள் இவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவதில்லை, இதனால் வட்டிக்குக் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் மாள்கின்றனர் என்று போலீஸ் அதிகாரி ரமேஷ் பாய் குலாப்ரோ தெரிவித்தார்.

சிலதொழிலாளர்களோ ஆண்டுக்கு 2 மாதங்கள் சம்பளம் கிடைப்பதில்லை கடன் வாங்க நேரிடுவதாகக் கூறியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பாக டயமண்ட் பட்டறையிலிருந்து தொழிலாளி ஒருவர் 5-ம் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது சூரத்தில் வைரப்பட்டறைகள் மூடப்பட்டன, இதனையடுத்து 50 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பொருளாதாரவியலாளர் இந்திரா ஹிர்வே தெரிவித்துள்ளார்.

டாலர்களில் சம்பாதித்துக் கொடுக்கும் டயமண்ட் வர்த்தகத்தில் 50 டயமண்ட் பாலிஷ் செய்தால் ரூ.400 கிடைக்கும் நிலைமையில்தான் தொழிலாளர்கள் உள்ளனர்.

அரசு தரப்பும் டயமண்ட் வர்த்தகத் தரப்பும் இன்னும் இதனால் பயனடைந்து வரும் பலரும் ‘இது ஒரு பாசிட்டிவ் இண்டஸ்ட்ரி’ என்ற பாட்டைத் தொடர்ந்து பாட, மகனைப் பறிகொடுத்த தாய் வசன்பென், “என் மற்ற மகன்களை நிச்சயம் இந்தத் தொழிலில் விடமாட்டேன், இதில் வளர்ச்சியும் இல்லை முன்னேற்றமும் இல்லை. இந்தத் தொழிலில் இருந்து கொண்டு வாழ்க்கையில் ஒருவர் முன்னேறவே முடியாது” என்கிறார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x