வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
Updated on
2 min read

வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஏழை, நடுத்தர வர்க்க மக்களை லட்சுமி தேவி ஆசீர்வதிக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவையாற்ற மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்து உள்ளனர். 3-வது முறை ஆட்சிப் பொறுப்பேற்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும்.

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு வித்திடும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் புதிய நம்பிக்கை, புதிய சக்தியை அளிக்கும். வரும். 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அப்போது வளர்ச்சி அடைந்த பாரதம் நிச்சயம் உருவாகும்.

இந்த லட்சிய கனவை எட்ட 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு சமஉரிமை கிடைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு பட்ஜெட் தொடரில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இதன்மூலம் நமது நாடு அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசோடு இணைந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டில் இளைஞர்கள் நிறைந்து உள்ளனர். 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். அவர்கள் 45-50 வயதை எட்டும்போது வளர்ச்சி அடைந்த பாரதத்தின் பலன்களை அனுபவிக்க முடியும்.

கடந்த 1930 மற்றும் 1942-ம் ஆண்டுகளில் நாட்டின் சுதந்திர போராட்டம் உச்சத்தை தொட்டது. அப்போது பெருந்திரளான இளைஞர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் தியாகத்தால் நாம் சுதந்திர காற்றை சுவாசித்தோம். தற்போது அதே உத்வேகத்தோடு வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் உழைக்க வேண்டும். இது நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது.

கடந்த 2014-ம் ஆண்டில் நான் பிரதமராக பதவியேற்றேன். அப்போதுமுதல் ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டில் இருந்து ஏதாவது ஒரு தீப்பிழம்பு தூக்கி வீசப்படும். அந்த தீப்பிழம்பை மிகப்பெரிய தீயாக மாற்ற சிலர் தீவிர முயற்சி செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த கேலிக்கூத்து நடைபெற்று வருகிறது. முதல்முறையாக தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளிநாட்டில் இருந்து எந்தவொரு பிரச்சினையும் எழுப்பப்படாமல் இருக்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in