ஓய்வுபெற்ற ஆயுதப் படை வீரரை உச்ச நீதிமன்றத்துக்கு இழுப்பதா? - மத்திய அரசுக்கு கண்டனம்

ஓய்வுபெற்ற ஆயுதப் படை வீரரை உச்ச நீதிமன்றத்துக்கு இழுப்பதா? - மத்திய அரசுக்கு கண்டனம்
Updated on
1 min read

ஓய்வுபெற்ற ஆயுதப்படை வீரரை நீதிமன்றத்துக்கு இழுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் ஒரு கொள்கையை வகுக்குமாறு கேட்டுக் கொண்டது.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ரேடியோ ஃபிட்டர் ஒருவருக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க ஆயுதப்படை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆயுதப்படை தீர்ப்பாயம் மூலம் ஊனமுற்றோர் ஓய்வூதிய நிவாரணம் பெற்ற ஆயுதப்படை வீரரை உச்ச நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டிய அவசியமில்லை. மேல்முறையீடு செய்வதில் மத்திய அரசு விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அரசுக்கு நடைமுறை சார்ந்த பார்வை இருக்க வேண்டும். ஒரு ராணுவ வீரர் 15, 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார். அவருக்கு ஏதாவது ஊனம் என்றால் ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவர்களை ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும்?

அற்பமான மேல்முறையீடுகள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். ஆயுதப்படை உறுப்பினர்களை உச்ச நீதிமன்றத்துக்கு இழுக்க முடிவெடுப்பதற்கு முன் அதுகுறித்து நன்கு ஆராய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in