

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரது வீட்டில் இருந்து தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவைகள், கைகடிகாரங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் அந்த பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ``நீதிபதி ஹெச்.ஏ.மோகன் கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள நகைகள், புடவைகள், சொத்துகளின் ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்'' என தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று முன் தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.வி.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘‘கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் பிப்ரவரி 14, 15-ம் தேதிகளில் ஒப்படைக்க வேண்டும். இதனை தமிழக அரசின் உள்துறை இணை செயலாளர், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, ஆபரண மதிப்பீட்டாளர்
ஆகியோர் முறையாக கணக்கிட்டு பெற்று கொள்ள வேண்டும். 6 பெட்டிகள், வாகனம் ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.