

கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் அதன் தலைவர் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது தமிழக அரசு முன்வைத்த வாதத்தில், "கடந்த 28-ம் தேதி மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 79.213 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 410 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனம், குடிநீர், சுற்றுச்சூழல் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு பிப்ரவரி முதல் மே மாதம் வரை மாதந்தோறும் 2.5 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திறந்துவிட வேண்டும். கடந்த காலங்களில் இந்த நீரை கர்நாடக அரசு முழுமையாக திறந்துவிடவில்லை. இந்த ஆண்டில் முறையாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது.
அதற்கு கர்நாடக அரசின் தரப்பில் கூறும்போது, ''நிகழாண்டில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள அளவைவிட தமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு, பெங்களூருவின் குடிநீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு உரிய நீர் திறந்துவிடப்படும். கடந்த காலத்தில் கூடுதலாக வழங்கிய நீரை, இதற்கான நீராக கருத்தில் கொள்ள வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது.
இறுதியில் பேசிய ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ''காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பொழிந்துள்ளதால் நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் இல்லை. திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்''என தெரிவித்தார்.