“நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு” - ப.சிதம்பரம்

“நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு” - ப.சிதம்பரம்
Updated on
1 min read

புதுடெல்லி: “நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், முன்னாள் எம்.பி ராஜீவ் கவுடா மற்றும் அவரது குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருளாதாரத்தின் உண்மையான நிலை 2025 (Real State of the Economy 2025) என்ற அறிக்கையை மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டார். அதன்பிறகு பேசிய அவர், “நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்பதை மறுக்கவே முடியாது. இதனால், வேலையின்மை அதிகரித்துள்ளது.

அதாவது, இளைஞர்களின் வேலையின்மை 40 சதவீதத்தை நெருங்கிவிட்டது. பிரதமர் அவ்வப்போது மக்களுக்கு நியமன கடிதங்களை வழங்கி வருகிறார். இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது மட்டுமே, புதிய பணியிடங்களை உருவாக்குவது இதில் அடங்காது. நாட்டில் பணவீக்கம் - விலைவாசி அதிகரித்து வருகிறது. நாட்டில் மிகப் பெரிய வருமான சமத்துவமின்மை நிலவுகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. அதைச் சமாளிக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை” என்றார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது இந்த ஆண்டி முதல் கூட்டத் தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதையடுத்து, சனிக்கிழமை வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in