ரூ.500 விலையில் எல்பிஜி முதல் பெண்களுக்கு ரூ.2,500 வரை: டெல்லி தேர்தலுக்கு காங்கிரஸ் வாக்குறுதிகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ரூ.500 விலையில் எல்பிஜி, பெண்களுக்கு ரூ.2,500 பண மானியம், 100 இந்திரா கேன்டீன்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி கணக்கெடுப்பு நடத்தப்படும். பூர்வாஞ்சல் மக்களுக்கென ஒரு அமைச்சகம் அமைக்கப்படும். பெண்களுக்கு மாதாந்திர மானியம் ரூ.2,500 வழங்கப்படும். 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். ரூ. 25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும். இலவச ரேஷன் தொகுப்பு வழங்கப்படும். குறைந்த விலையில் உணவு வழங்கும் 100 இந்திரா கேன்டீன்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதையடுத்துப் பேசிய ஜெயராம் ரமேஷ், “இன்று அனைத்துக் கட்சிகளும் 'உத்தரவாதம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்த வார்த்தையை கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. காங்கிரஸ் கட்சி தான் சொல்வதைச் செய்கிறது என்ற செய்தியை பொதுமக்களுக்கு வழங்க விரும்பினோம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ​​காங்கிரஸ் கட்சி உத்தரவாதச் சட்டத்தைக் கொண்டு வந்தது, அது நிறைவேற்றப்பட்டது, அதன் பெயர் 'தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்'.

உத்தரவாதத்தின் பொருள்- இது பொதுமக்களின் உரிமை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவர்கள் சட்டப்பூர்வ உதவியையும் பெறலாம். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி டெல்லிக்கு 5 உத்தரவாதங்களை வழங்கியுள்ளது. ​​டெல்லியில், வணிகம் செய்வது எளிமையாக்கப்படும். காற்று மாசு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு சுவாசிப்பது எளிதாக்கப்படும். டெல்லியில் உள்ள பாஜக அல்லது ஆம் ஆத்மி அரசு இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை." என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in