நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் இறங்குகிறாரா? - தொடர்ந்து வற்புறுத்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்

நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் இறங்குகிறாரா? - தொடர்ந்து வற்புறுத்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்
Updated on
1 min read

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார் பிஹாரில் 9-வது முறையாக முதல்வராக உள்ளார். பாஜக தலைமையிலான என்டிஏ அல்லது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணி என அவருக்கு மாறி, மாறி ஆதரவு கிடைக்கிறது. தற்போது என்டிஏ சார்பில் அவர் முதல்வராக இருக்கிறார்.

நிதிஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமார், மெர்சாவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினீயரிங் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார்.

அவரை அரசியலில் இறங்கும்படி ஜேடியூவினர் வற்புறுத்தி வந்தாலும் அதற்கு நிஷாந்த் மறுப்பு தெரிவித்து வருகிறார். தந்தையான நிதிஷும் தனது வாரிசு அரசியலுக்கு வரும் வாய்ப்பில்லை என கூறி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 8-ல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் சிலை திறக்க முதல்வர் நிதிஷ் பக்தியார்பூர் சென்றிருந்தார். அப்போது அவருடன் வந்த நிஷாந்திடம் அரசியலுக்கு வரும்படி கட்சியினர் நேரடியாக வலியுறுத்தினர்.

இதற்கு, "அதற்கான வாய்ப்புகள் இல்லை" என்று தந்தை முன்னிலையில் நிஷாந்த் கூறியதை கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சலிட்டனர். இதை முதல்வர் நிதிஷ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நிஷாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு தொடங்கிவிட்டது.

கடைசியாக நிஷாந்த் கடந்த 2015-ல் தனது தந்தையின் முதல்வர் பதவியேற்பு விழாவில் பொதுவெளியில் காணப்பட்டார். அப்போது அவர் லாலுவின் ஆர்ஜேடி உறவினர்களுக்கு சலுகை அளிப்பதாக புகார் கூறினார். அப்போதும் அவர் அரசியலில் இறங்குவதாகப் பேச்சுக்கள் எழுந்தன.

தற்போது 73 வயதாகும் நிதிஷ் தளர்ந்த நிலையில் இருப்பதும் நிஷாந்த் அரசியலில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு காரணமாக உள்ளது. இச்சூழலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பிஹார் தேர்தலில் நிஷாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜேடியூ மாநில பொதுச் செயலாளர் ஹன்ஸ் குமார் கூறும்போது, "குடும்ப அரசியலுக்கு முற்றிலும் எதிரானவர் நிதிஷ். எனினும் அரசியலில் ஒரு தூய்மையான நிலைப்பாட்டை பின்பற்றுபவரின் மகன் அரசியலுக்கு வந்து நாட்டுக்கு சேவை செய்வதில் என்ன தவறு உள்ளது?” என்றார்.

பிஹார் முக்கிய தலைவர்களில் லாலுவின் மகன் தேஜஸ்வி, மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் ஆகியோர் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in