

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறிருப்பதாவது: திரையரங்குகள், மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இரவு 1.30 மணி வரை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதனால் சிறுவர்களின் உடல்நிலையிலும், மனநிலையிலும் எதிர்மறைவு விளைவுகள் ஏற்படும். எனவே, திரையரங்குகளில் இரவு 11 மணிக்குப் பிறகு சிறுவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், திரையரங்குகள், மல்ட்டிபிளெக்ஸ்களில் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வருவதை ஒழுங்குபடுத்துவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து, அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதுவரை இரவு 11 மணிக்குப் பிறகு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.